இந்தியாவில் விளையாட்டுத்துறைக்கென அதிக நிதி ஒதுக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதமாக கூறினார்.
மாநில அளவிலான 37வது பாரதியார் தின குழு விளையாட்டுப்போட்டிகள் துவக்க விழா, ஆத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (நவ. 26) தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமை வகித்தார். பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (என்எஸ்எஸ்) வாசு வரவேற்றார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் போட்டிகளை துவக்கி வைத்தார். அவர் பேசியதாவது:
தமிழகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, கல்வி, விளையாட்டு, சுகாதாரம் ஆகியவற்றை முதன்மைப்படுத்தி பல்வேறு திட்டங்களை செயல்ப டுத்தி வருகிறது.
தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தில் தேர்வு செய்யப்படும் விளையாட்டு வீரர்களுக்கு, இப்போது தினப்படியாக 100 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதை 150 ரூபாயாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே விளையாட்டுத்துறைக்கென அதிக நிதி ஒதுக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். நடப்பு ஆண்டில் 76.42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
தமிழகத்தில் 412 மையங்களில், 21 ஆயிரம் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு, கடந்த ஓராண்டாக இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் அரசுப்பள்ளியில் படித்தவர்களில் 2 பேருக்கு மட்டுமே மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்ததாக கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், இப்போது பிளஸ்2 புதிய பாடத்தில் பயிற்சி பெறும் மாணவர்கள், வரும் காலங்களில் மத்திய அரசால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளையும் துணிச்சலாக சந்திக்கும் வகையில் அவர்களை தயார்படுத்தி வருகிறோம்.
மத்திய அரசு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தி வரும் திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, உதவித்தொகை காலதாமதமாவது குறித்து ஆய்வு நடத்தப்படும். உடனடியாக உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் ஒருபோதும் தங்களது முயற்சிகளை நிறுத்தி விடக்கூடாது. மூச்சு நின்று விட்டால் மட்டும் மரணம் அல்ல. நம்முடைய முயற்சிகள் நின்றாலும் மரணம்தான். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.