இந்தியாவில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கை மே 31 ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்தது. இவ்வாறு ஊரடங்கு நீட்டித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையிலும், கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பது அரசுகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. இந்த வைரஸின் தாக்கம் தமிழகத்திலும் மிகப்பெரிய அளவில் உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று மேலும் 688 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் அதிகபட்சமாக சென்னையில் இன்று 552 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை சென்னையில் கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 7,672 ஆக உள்ளது. தமிழகத்தில் கரோனாவால் இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை 81 லிருந்து 84 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து 489 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதையடுத்து, குணமடைந்தோர் எண்ணிக்கையும் 4,895 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.