TAMILNADU CONGRESS COMMITTEE PRESIDENT KS Alagiri

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் முகமது நபியைத் தவறாகப் பேசியதைக் கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நேற்று (28/06/2022) இரவு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Advertisment

அப்போது அவர் கூறியதாவது, "இந்தியாவில் பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்களும் மொழிகளைப் பேசுபவர்களும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களிடத்தில் மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. குஜராத்தில் 2000 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் விடுதலை ஆகி உள்ளனர். ஆனால், அங்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடுத்து பொதுமக்களை பாதுகாத்த காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது எந்த விதத்தில் நியாயம்? இந்தியாவில் 35 கோடி சிறுபான்மை மக்களும் 25 கோடிக்கும் மேல் தலித் மக்களும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இல்லாமல் ஆட்சி நடத்த முடியுமா?

Advertisment

மோடி அரசின் ஒரே மொழி ஒரே கலாச்சாரம் என்பது சாத்தியப்படுமா? முகமது நபியை அவதூறாக பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவையும், நவீன் ஜிண்டாலையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் நபிகள் குறித்து நுபூர் சர்மாவைப் பேச வைத்தது ஆர்எஸ்எஸ் மற்றும் சங் பரிவார் அமைப்பின் பின் புலத்தில் தான் இவர்கள் பேசுகிறார்கள். அக்னிபாத்திட்டம் மோடி அரசின் ஒரு தவறான முன்னுதாரணம் திட்டம், 4 ஆண்டுகளில் துப்பாக்கியை துடைக்கத்தான் கற்றுக்கொள்ள முடியும். இளைஞர் கையில் துப்பாக்கியைக் கொடுத்து வாக்குச்சாவடியில் அடியாட்களாக மாற்றும் திட்டம் தான் இந்த அக்னிபாத்.

தற்போது ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு வேலை இல்லை. இந்த நிலையில், இவர்களுக்கு எப்படி வேலை கிடைக்கும். அ.தி.மு.க. பாரதிய ஜனதா கட்சியின் அடிமை கட்சியாக உள்ளது. அதனால் நபிகள் நாயகம் குறித்து தவறாக பேசியதை கூட, அவர்களால் கண்டிக்க முடியவில்லை. நடராஜர் கோயில் குறித்து அவதூறாகப் பதிவு செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சி தேவைப்பட்டால், போராட்டத்தில் ஈடுபடும். தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தில் பெட்ரோல் விலை குறைப்பு, வடிகால் வாய்க்கால்கள் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளது.

நபிகள் குறித்து தவறாக பேசியதை அனைத்து சமூகமும் கண்டிக்க வேண்டும். அந்த வகையில் இஸ்லாமியர்கள் அல்லாத கிறிஸ்தவராகிய அருட்தந்தை சுபாஷ் சந்திரபோஸ், இந்து வாகிய நான், திருமா, தமிமுன்அன்சாரி உள்ளிட்டத் தலைவர்கள் இன்று நடைபெறும் இந்தபொதுகூட்டத்தில் கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்" எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது, காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் இதயதுல்லா, தமிழ்நாடு வக்பு போர்டு தலைவர் அப்துல் ரகுமான்,காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் சித்தார்த்தன், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், நகர தலைவர் மக்கின், மூத்த நிர்வாகி ஜெமினி ராதா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.