/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ksa444.jpg)
அனைத்து உயர்மின் கோபுரத் திட்டங்களுக்கும், மாத வாடகை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு மின் தொடரமைப்புகழகத்தின், விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 கிலோ வாட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள், இன்னும் நிலுவையில் உள்ளன. அதுவரை பணிகளை நிறுத்திவைக்க வேண்டும் என்பது தான் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமாக நிலத்திற்கு இழப்பீடு நிர்ணயிக்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே, 100 சதவிகித 'சொலேசியம்' எனப்படும் ஆதாரத் தொகையை, உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்க வேண்டும்.அனைத்து உயர்மின் கோபுரத்திட்டங்களுக்கும் மாத வாடகை நிர்ணயம் செய்து வழங்கவேண்டும்.
தமிழக அரசு குறைந்தபட்ச இழப்பீடாக, ரூபாய் 50,000 அறிவித்துள்ளது. அதை உயர்த்தி ரூபாய் 10 லட்சம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பயிர்கள் மற்றும் மரங்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் ஒரே சீராக இழப்பீடு நிர்ணயம் செய்து வழங்கவேண்டும். திட்டப்பாதையில் உள்ள கிணறு, ஆழ்குழாய்க் கிணறு, வீடுகள் உள்ளிட்ட நிரந்தர கட்டுமானங்களுக்குச் சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும்.
விவசாயிகளின் தொடர் போராட்டத்தின் விளைவாக நிலம், பயிர்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளின் அடிப்படையில், 13 மாவட்டங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை. அது குறித்து தமிழக அரசு உடனடியாகக் கணக்கெடுப்பு நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
அறவழியில் போராடிய பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 38 வழக்குகளைத் தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். உயர்மின் கோபுரங்கள் பிரச்சனையில்மின்துறை அமைச்சர் தங்கமணி அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.தொடர்ந்து 4 ஆண்டுகளாக உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பல்வேறு வழிகளில் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அறவழியில் போராடி வருகிறார்கள்.
இந்நிலையில், கடந்த 04-01-2019 அன்று தமிழக சட்டப்பேரவையில் பேசிய தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குப் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 4 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால், அமைச்சரின் அறிவிப்பு இன்று வரை அறிவிப்போடு நிற்கிறது. அதனை நடைமுறைப்படுத்த அமைச்சர் சிறிதும் முயலவில்லை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01 (1)_0.png)
கடந்த 04-01-2021 அன்று மின்சாரத்துறை அமைச்சரைச் சந்தித்து இழப்பீடு சம்பந்தப்பட்ட கோரிக்கைகளையும், விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான765 கிலோ வாட் திட்டத்தை வழக்குகள் முடியும் வரை நிறுத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் 200- க்கும் மேற்பட்ட விவசாயிகள் முன்வைத்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அமைச்சர் தங்கமணி தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறார்.
ஏற்கனவே, மோடி அரசின் 3 விவசாயச் சட்டங்களால் எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில், விவசாயிகள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை மேலும் கண்ணீர் சிந்தவிடாமல், தமிழக அரசு விரைந்து செயல்பட்டு, அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்"இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)