Skip to main content

'போக்குவரத்துத் துறை முறைகேடுகளை விசாரிக்க வேண்டும்'- கே.எஸ்.அழகிரி!

Published on 13/12/2020 | Edited on 13/12/2020

 

TAMILNADU CONGRESS COMMITTEE KS ALAGIRI STATEMENT

போக்குவரத்துத்துறை முறைகேடுகளை தமிழக அரசு தாமாக முன் வந்து விசாரிக்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.

 

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில், மோட்டார் வாகன ஆய்வாளர் கலைச்செல்வியிடமிருந்து கணக்கில் வராத 117 சவரன் தங்க நகை மற்றும் 24 லட்சத்து 15 ஆயிரத்து 780 ரூபாய் பணமும், மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்திடமிருந்து 1லட்சத்து 43 ஆயிரத்து 250 ரூபாய் பணமும் இடைத்தரகர் அதுல் பிரசாத்திடமிருந்து ரூ. 7,850   பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  

 

அதேபோன்று, சென்னை, ஓசூர், தேனி, ஊத்துக்கோட்டை, நசரத்பேட்டை, வேலூர், தென்காசி, கன்னியாகுமரி, திருவள்ளூர், விழுப்புரம், கோவை உள்ளிட்ட 17 சோதனைச் சாவடிகளில் இன்று ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனைகள் நடத்தியதில் மட்டும் கணக்கில் வராத மொத்தம் ரூ. 30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

போக்குவரத்துத் துறை என்பது இன்று முற்றிலும் ஊழலால் புரையோடிவிட்டதையே இத்தகைய சோதனையும், மீட்கப்பட்ட பணமும், நகைகளும் பிரதிபலிக்கின்றன. இதனால், சாதாரண மக்களால் ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் நீட்டிப்பு போன்றவற்றைக் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  ஆன்லைன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதால், போக்குவரத்துத் துறையில் ஊழலுக்கே இடமில்லை என்று அரசு தரப்பில் செய்யப்படும் பிரச்சாரம், கடந்த சில நாட்களாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நடத்தப்படும் சோதனையால் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

போக்குவரத்துத் துறைக்கு  சில தனியார் நிறுவனங்களிடம் மட்டுமே ஒளிரும் பட்டை, வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகள், ஜி.பி.எஸ். கருவிகள் வாங்க வேண்டும் என  போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டிருப்பதாகவும், இதில் மெகா வசூல் நடப்பதாகவும் தி.மு.க. தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் புகார் தெரிவித்திருந்தார்.

 

பொதுச் சேவை மற்றும் சரக்கு வாகனங்களில் பெண்கள் மற்றும் பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் வாகன கண்காணிப்புக் கருவி பொருத்தும் திட்டத்தில் 5 ஆயிரம் கோடி அளவுக்குத் தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் ஊழல் நடைபெற்றுள்ளதாகச் சர்வதேச சாலை பாதுகாப்பு நிபுணர் டாக்டர் கமல் சோய் குற்றம் சாட்டியுள்ளார். 

 

நடைமுறையைப் பின்பற்றாமல், 8 தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் கருவிகளை வழங்க தன்னிச்சையாக ஒப்புதல் அளித்திருப்பது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. இத்தகைய முறைகேட்டால், பெண்கள் பாதுகாப்பு குறித்த முக்கிய நோக்கம் தோல்வியடைந்துள்ளது.

 

சோதனை செய்வதும், வழக்கு என்ற பெயரில் இழுத்தடிக்கப்பட்டு அந்த சம்பவம் மறந்துபோவதும் தொடர் கதையாகிக் கொண்டிருக்கிறது. ஏதோ, போக்குவரத்துத்துறையில் கீழ்நிலை ஊழியர்கள் தான் இந்த முறைகேட்டில் ஈடுபடுவது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் அளவிலிருந்து சமிக்ஞை வராமல் இத்தகைய முறைகேட்டில் யாரும் ஈடுபடச் சாத்தியமில்லை என்பதே உண்மை. 

 

மேல்மட்டத்திலிருந்து விசாரித்தால் தான், இது போன்ற ஊழலுக்கு முடிவு கட்ட முடியும். தமிழகத்தில் போக்குவரத்துத் துறையில் தான் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் ஒரு சில போக்குவரத்து அலுவலகங்களில் கணக்கில் வராத இவ்வளவு பெரிய தொகை சோதனையில் சிக்கியிருக்கிறது. சோதனை செய்யாத மாவட்ட போக்குவரத்து அலுவலகங்களில் எத்தனை கோடி ஊழல் நடைபெறுகிறதோ? இது மாநில அளவில் போக்குவரத்து அமைச்சரின் ஆதரவில்லாமல் மாவட்ட அளவில் போக்குவரத்து அலுவலகங்களில் ஊழல் நடக்க வாய்ப்பு இல்லை. இதற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் தான் பொறுப்பு.

 

இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் விசாரணையோடு நிறுத்தாமல், இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அமைச்சர் முதல் அதிகாரிகள் வரையிலான தொடர்புகள் வெளிவந்தால் தான், போக்குவரத்துத் துறை மீது படிந்துள்ள கறை நீங்கும்.

 

எனவே, தமிழக அரசு தாமாக முன்வந்து, போக்குவரத்துத் துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும். அவ்வாறு பரிந்துரைக்காவிட்டால், நீதிமன்றம் மூலம் சி.பி.ஐ. விசாரணை கோருவோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.' இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றம்?

Published on 16/08/2023 | Edited on 16/08/2023

 

Tamil Nadu Congress Committee Chairman Change

 

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரி கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பதவி வகித்து வருகிறார். 5 ஆண்டுக் காலம் இந்தப் பதவியில் உள்ள கே.எஸ். அழகிரி மாற்றப்பட்டு அதற்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. புதியதாகத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராகத் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர்களின் பெயர்கள் டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் பரிசீலனையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதே சமயம் தமிழகச் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலும் மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

 

 

Next Story

"பெட்ரோல் குண்டு கலாச்சாரத்திற்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும்"-  டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்! 

Published on 25/09/2022 | Edited on 25/09/2022

 

tamilnadu bjp and rss leaders homes incident pmk ramadoss statement

 

பா.ம.க.வின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று (25/09/2022) வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை உட்பட தமிழ்நாட்டில் 10- க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளன. தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான இந்த வன்முறை நிகழ்வுகள்  கட்டுக்குள் கொண்டுவரப்படுவதற்கு மாறாக, பிற பகுதிகளுக்கு பரவி வருவது மிகுந்த கவலையளிக்கிறது.

 

கோவை காந்திபுரத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் மீது கடந்த 22- ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், நல்வாய்ப்பாக அந்த குண்டு வெடிக்காததால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. அதனால், பொதுமக்களும், காவல்துறையினரும் நிம்மதியடைந்த நிலையில், கோவை மாவட்டத்திலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இத்தகைய பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது தான் மக்களின் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.

 

கோவையில் தொடங்கிய பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, இராமநாதபுரம் உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு பரவியிருக்கின்றன. கடந்த 24 மணி நேரங்களில் மட்டும் சென்னை சிட்லபாக்கம், சேலம், கன்னியாகுமரி என தமிழகத்தின் அனைத்து திசைகளில் இருந்தும் பெட்ரோல் குண்டு வீச்சு குறித்த செய்திகள் வருவதை அலட்சியப்படுத்த முடியாது. இந்தத் தாக்குதல்களில் மனித உயிர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் கூட பொது சொத்துகளும், தனிநபர் சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. அடுத்து என்ன நிகழுமோ? என்பது குறித்த அச்சம் தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களின் மக்களிடம் ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது.

 

தமிழகத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று தமிழகம் அமைதிப்பூங்கா என்பது தான். இந்திய விடுதலைக்கு முன்பும், பின்பும் தமிழகத்தை ஆட்சி செய்த அனைத்து முதலமைச்சர்களும் தமிழகத்தை அமைதிப் பூங்காவாக பராமரித்ததை தங்களின் சாதனைகளில் ஒன்றாக குறிப்பிட்டு வருவதை நாம் அறிவோம். அமைதிப் பூங்கா என்ற தமிழகத்தின் பெருமைக்கு பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் குந்தகத்தை ஏற்படுத்தி விடக் கூடாது. பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும்.

 

தமிழ்நாட்டில் 20- க்கும் மேற்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் நடந்திருக்கின்றன; அவற்றின் சி.சி.டி.வி காட்சிகளும் பெளியாகியுள்ளன. இவ்வளவுக்குப் பிறகும் ஓரிருவரைத் தவிர, பெட்ரோல் குண்டு குற்றவாளிகள் கைது செய்யப்படாதது கவலை அளிக்கிறது. பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபடுவோர் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த அறிவிப்புகள் மட்டுமே நிலையைக் கட்டுக்குள் கொண்டு வந்து விடாது; கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

 

தமிழ்நாட்டின் அமைதி, வளர்ச்சி, தொழில் முதலீடுகளை ஈர்த்தல் உள்ளிட்ட அனைத்திற்கும் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டியது அவசியம் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரத்திற்கு தமிழக அரசு விரைந்து முடிவு கட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன்." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.