Skip to main content

“ஆறு வருடத்திற்கு மு.க.ஸ்டாலின் தேர்தலில் நிற்க முடியாது!” -தேர்தல் வழக்கின் முடிவு குறித்து எடப்பாடி ஆரூடம்

Published on 12/11/2020 | Edited on 12/11/2020

 

tamilnadu cm palanisamy pressmeet at virudhunagar district

 

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு நடத்திய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தார். மேலும், 8,466 பயனாளிகளுக்கு ரூ.45.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

 

பிறகு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கரோனா பாதிப்புக்கு ஆளாகி காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, சிகிச்சை பலனின்றி இறந்தார். ஆனால், எதிர்க்கட்சி தலைவர் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறான செய்தியைப் பரப்பி வருகிறார். அவர் விரக்தியின் விளிம்புக்குப் போய்விட்டார். அதனால், இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கொட்டித் தீர்க்கிறார். வேளாண்துறை அமைச்சர் சாவில் என்ன மர்மம் இருக்கிறதென்று நீங்க சொல்லுங்க. முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மருத்துவ சிகிச்சை பெற்றது அதே காவிரி மருத்துவமனையில்தான். நீங்க மருத்துவமனையைக் குறை சொல்லுறீங்களா? சிகிச்சை அளித்த மருத்துவர்களைக் குறை சொல்லுறீங்களா? அங்கே கரோனா வைரஸ் இல்லாமல் யாரும் உள்ளே போகமுடியாது. மருத்துவர்களும், செவிலியர்களும் நோயைக் குணப்படுத்துவதற்காக சிகிச்சை அளித்தார்கள். ஆனால், எதிர்க்கட்சி தலைவர் அரசியல் உள்நோக்கத்தோடு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, பொய்யான அவதூறான பிரச்சாரத்தை பரப்பிக்கொண்டிருக்கிறார்.

 

tamilnadu cm palanisamy pressmeet at virudhunagar district

 

என்ன மர்மம் என்று சொல்லுங்க? டாக்டர் சரியா வைத்தியம் பார்க்கவில்லையா? நர்ஸ் சரியா கவனிக்கலைன்னு சொல்லுறீங்களா? யாரும் போய் பார்க்க முடியாது. நான்கூட அந்த மருத்துவமனைக்கு சென்றபோது, வீடியோ கான்பரன்ஸில்தான் துரைக்கண்ணுவைப் பார்த்தேன். ஆனால், எதிர்க்கட்சி தலைவர் வேண்டுமென்றே திட்டமிட்டு கீழ்த்தரமான அரசியல் செய்கிறார். அவர் நினைத்தார்- பத்து நாளில் ஆட்சி போய்விடும்.. ஒரு மாதத்தில் போய்விடும்.. ரெண்டு மாதத்தில் போய்விடும்.. மூணு மாதத்தில் போய்விடும்.. ஆறு மாதத்தில் போய்விடும்.. ஒரு வருடத்தில் போய்விடும் என்று சொன்னார். எல்லா இடைத்தேர்தலிலும் அவரோட  கனவு பலன் தராமல் போனது.

 

தற்போது, ஸ்டாலின் மலிவான அரசியல் செய்கிறார். அப்படியென்றால், நீங்க உங்க அப்பாவை (கலைஞர்) கொண்டுபோய் சேர்த்து அங்கே மருத்துவ சிகிச்சை அளித்தீர்கள். அதே மருத்துவமனையில்தானே ஒவ்வொரு நாளும் அறிக்கை விட்டார்கள். அப்படியென்றால், நீங்கள் ஏதாவது தவறு செய்திருப்பீர்களோ என்று எங்களுக்கு சந்தேகம் வருகிறது. என்னைப் பொறுத்தவரையில் அந்த மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறார்கள். மனிதாபிமானம் இல்லாத மனிதரென்றால், எதிர்க்கட்சி தலைவர்தான். நாங்கள் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்ப்பதில்லை. அன்பழகன் சிகிச்சை பெற்றபோது, எங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து சில மருந்துகள் வேண்டுமென்று சொன்னார்கள். உடனே, ஏற்பாடு செய்து கொடுத்தோம்.

 

எல்லா உயிரும் முக்கியம். மனிதாபிமான முறையில் அதைச் செய்தோம். இதிலும் அரசியல் செய்வதைப் பார்க்கும்போது மிகமிக வேதனையாக இருக்கிறது. அப்பல்லோவில் வசந்தகுமாருக்கு சிகிச்சை அளித்தபோது, தேவைப்பட்ட மருத்துவ உதவிகளைச் செய்தோம். மனதில் இரக்கம் இருக்க வேண்டும்; ஈரம் இருக்க வேண்டும். பதவி ஆசைதான் முக்கியம் என்று நினைத்தால், மக்கள்தான் அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். இப்படி, இறப்பிலும் அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். குறிப்பாக, ஸ்டாலின் அவர்கள் அதுபோல் செய்கிறார் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

 

tamilnadu cm palanisamy pressmeet at virudhunagar district

 

‘திருவனந்தபுரத்தில் கரோனா குறைந்துவிட்டது. தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது. இங்கே கரோனா எதிர்ப்பு நடவடிக்கைகள் சரியில்லை’ என்று சொன்னீர்கள். தற்போது, கேரளாவில் கரோனா அதிகமாகிவிட்டதே? யாராவது வாய் பேசுகின்றீர்களா? இன்னும் சில கட்சிகள்.. இப்போதுதான் முளைத்திருக்கின்ற கட்சி.. அது எந்த கட்சி என்று தெரியும். அதைப் பிரபலப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அந்தக் கட்சி தலைவர் சொன்னார். கேரளாவைப் பார் என்று. இப்ப போய் பாருங்கள் கேரளாவை. திருவனந்தபுரத்துக்குப் போய் பத்து நாட்கள் தங்கியிருந்துவிட்டு வாருங்கள். அப்போதுதான் தெரியும். குறை சொல்ல வேண்டுமென்பதற்காகவே அரசு மீது குறை சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அரசைக் குறை கூறும்போது, பாதிக்கப்படுபவர்கள் அரசு ஊழியர்கள்தான். இனி, இப்படிப்பட்ட அரசியல் செய்யாதீர்கள். தினம்தோறும் எடப்பாடி பழனிசாமியை குறை சொன்னால்தான் அவர்களுக்கு தூக்கமே வரும். என்னுடைய ஆட்சியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

 

முன்னாள் அமைச்சர்கள் மீது.. பல அமைச்சர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்பதை ஸ்டாலின் எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்கூட, அடுத்த தேர்தலிலே நிற்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அவருடைய தேர்தல் வழக்கு ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. அது எப்படி முடிவுக்கு வருமென்று தெரியவில்லை. ஆக, முடிவு வேறுவிதமாக இருந்தால், அவர் ஆறு வருடத்திற்கு தேர்தலில் நிற்கமுடியாது. அவருடைய கனவு பலிக்காது. நல்ல எண்ணம் படைத்தவராக இருந்தால், நல்ல தீர்ப்பு கிடைக்கும். தீய எண்ணம் கொண்டவராக இருந்தால் ஆண்டவன் பார்த்துக்கொள்வார்” என்று அரசு விழா மேடையில் ‘அரசியல்’ பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.