கரோனா தடுப்பு பணிகள் தொடர்பாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், பல்வேறு துறைச்சார்ந்த உயர் அதிகாரிகளும், காவல்துறை உயர் அதிகாரிகளும் கலந்துக்கொணடனர்.

Advertisment

ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி, "கரோனா தொற்றை தடுப்பதுதான் மிகவும் முக்கியம். அதைத்தான் அரசும் செய்து வருகிறது. மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி மாவட்ட ஆட்சியர்களிடன் கேட்டறிந்தேன். அரசு எடுத்த நடவடிக்கையால் கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. கரோனாவைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டதால் பாதிப்பு குறைந்துள்ளது. கரோனா பரவாமல் தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

TAMILNADU CM PALANISAMY PRESS MEET CHIEF SECRETARY OFFICE

கரோனாவைத் தடுப்பதில் தமிழக அரசு முன்கூட்டியே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தல்களுக்கு முன்பே தமிழக அரசு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது. ஜனவரி 23- ஆம் தேதி முதல் விமான நிலையங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் கரோனாவைத் தடுக்க 12 குழுக்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். மாவட்ட அளவில் கண்காணிக்கச் சிறப்பு அதிகாரிகளையும் அரசு நியமித்துள்ளது.

Advertisment

http://onelink.to/nknapp

கரோனா தொற்று எளிதாகப் பரவும் என்பதால் மிகப்பெரிய சவாலாக உள்ளது. அரசு மருத்துவமனைகளில் 2,501, தனியார் மருத்துவமனைகளில் 870 என மொத்தம் 3,371 வெண்டிலேட்டர்கள் உள்ளன. 65 லட்சம் மூன்றடுக்கு முகக் கவசம், மூன்று லட்சம் N- 95 முகக் கவசங்கள், முழு உடற்கவச உடை இரண்டு லட்சம் உள்ளன. பரிசோதனைக்கான பி.சி.ஆர் கருவிகள் 68 ஆயிரம் உள்ளன. கரோனா பரிசோதனையை விரைவுப்படுத்த புதிதாக 35,000 பி.சி.ஆர் கருவிகள், 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 27 மையங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 5,590 பரிசோதனைகள் செய்கிறோம். கரோனாவை தடுப்பதற்கான அனைத்து மருத்துவ உபகரணங்களும் தமிழகத்தில் போதிய அளவு உள்ளன.

TAMILNADU CM PALANISAMY PRESS MEET CHIEF SECRETARY OFFICE

Advertisment

வெளிநாடுகளைப் போன்று உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,242-ல் இருந்து 1,267 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவர்கள் 6 பேர் , தனியார் மருத்துவர்கள் 5 பேர் என 13 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ல் இருந்து 15 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவிலேயே தமிழகம்தான் முன்னெச்சரிக்கையாக மருத்துவ உபகரணங்களை வாங்கி வைத்துள்ளது. 97.9% குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1,000 நிவாரணத் தொகை வழங்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணி முடிவடையும்.

சென்னையில் 1,100 வாகனங்கள் மூலம் நடமாடும் காய்கறிக்கடைகளும், 4,900 தள்ளுவண்டிகள் மூலமாகவும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகளின் விலையை அரசு கட்டுப்பாட்டில்தான் வைத்துள்ளது. துவரம் பருப்பு 500 மெட்ரிக் டன், மிளகு, கடுகு, சீரகம், வெந்தயம் 100 மெட்ரிக் டன் கொள்முதல் செய்து விலை உயர்வு தடுக்கப்பட்டுள்ளது. காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுவது முற்றிலும் தவறானது. மக்களுக்கு எந்தச் சிரமமும் ஏற்படாமலிருக்க அவர்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்றே காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.யார் யாருக்கெல்லாம் உணவு தேவையோ அவர்களுக்கு அரசு உணவு வழங்கி வருகிறது. ஆதரவற்ற 54 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் எந்த மாநிலத்திற்கும் இன்னும் ரேபிட் கிட் கருவிகள் வந்து சேரவில்லை. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவிடும். இனி வரும் காலங்களில் குணமடைந்து வருவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். வாசனை திரவிய ஆலைகள் பூக்களைக் கொள்முதல் செய்து வருகின்றன.

கரோனாவைத் தடுக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் தடை போடுகின்றன. அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள திமுக என்ன செய்துள்ளது? புயல், சுனாமி வந்தாலும் மு.க.ஸ்டாலின் குறை சொல்லிக் கொண்டே தான் இருப்பார். தமிழகத்தில் மட்டும்தான் கரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து வருவது வேதனை.வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பிய பணக்காரர்கள் தான் கரோனாவை இறக்குமதி செய்துள்ளனர். ஏழைகளுக்கு எந்த நோயும் இல்லை. நடப்பாண்டு ரம்ஜான் நோன்பு கஞ்சிக்காக 4,450 மெட்ரிக் டன் அரிசியை அரசு வழங்கும். இஸ்லாமிய அமைப்பினரை அழைத்து தலைமைச் செயலாளர் இன்று மாலை ஆலோசிக்க உள்ளார்.

ஏப்ரல் 20- ஆம் தேதிக்குப் பிறகு எந்தெந்த தொழில்களுக்கு அனுமதி தருவது பற்றி ஆராயக் குழு அமைக்கப்படும்.நிதித்துறை செயலாளர் தலைமையிலான குழு தரும் அறிக்கையின் படி நடவடிக்கை எடுக்கப்படும். கரோனாவால் பாதிக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் ரூபாய் 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும். கரோனா தொற்றால் பத்திரிகையாளர்கள் பாதித்தால் முழு செலவை அரசே ஏற்கும்." இவ்வாறு முதல்வர் பேசினார்.