
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், வரும் மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, இன்று (08/05/2021) பிற்பகல் மூலம் தமிழக மக்களுக்கு காணொளி மூலம் உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், "கரோனா பரவலைத் தடுக்க மருத்துவப் பணியாளர்கள் போராடி வருகின்றனர்; அவர்களுக்கு மக்களின் ஒத்துழைப்பு தேவை. மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரையிலான இரண்டு வார கால முழு ஊரடங்கை மக்கள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். இரண்டு வாரங்களில் மேலும் கரோனா அதிகரித்தால் நோயைக் கட்டுப்படுத்துவது சவாலாகிவிடும். 10 ஆண்டுகளில் நடந்த பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டுள்ளேன். இரண்டு வாரங்களும் மக்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அணியுங்கள், வீட்டிலேயே இருங்கள். வீட்டிலேயே இருந்தால் கரோனா பரவல் சங்கிலியை உடைக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற சத்தான உணவுகளை உண்ண வேண்டும். கரோனா குணப்படுத்தக் கூடிய நோய்தான்; மக்கள் அச்சப்பட வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.