
'ஹைட்ரோ கார்பன் திட்டம்' தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (13/06/2021) கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "டெல்டா மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும். எதிர்காலத்தில் தமிழகத்தின் எந்தப் பகுதியையும் ஹைட்ரோ கார்பன் ஏலத்திற்காக அறிவிக்கக் கூடாது. மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஏலம் விட்டாலும் தமிழக அரசு அனுமதி அளிக்காது. ஹைட்ரோ கார்பன் ஆய்வு, உற்பத்திச் செய்யத் தேவைப்படும் அனுமதி ஒருபோதும் வழங்கப்படாது. காவிரி படுகை வளத்தைக் கண்ணை இமை காப்பது போல் தமிழக அரசு காக்கும். ஹைட்ரோ கார்பன் உற்பத்திக்கு ஆழ்குழாய் கிணறுகளை அமைக்கக்கூடாது என்பது தமிழக அரசின் கொள்கை" என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் கடந்த ஜூன் 10- ஆம் தேதி ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பான ஏல அறிவிக்கையை வெளியிட்டிருந்த நிலையில், பிரதமருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.