tamilnadu chief minister mkstalin wrote a letter for nine state chief ministers

மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் 'புதிய துறைமுக சட்ட மசோதா'வுக்கு ஆட்சேபம் தெரிவிக்க வேண்டுமென கடலோர மாநிலங்களான புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, கோவா, ஆந்திரா, ஒடிஷா, மேற்கு வங்கம் ஆகிய ஒன்பது மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் துறைமுகங்கள் சட்டம் 1908-க்கு பதில் இந்திய துறைமுக மசோதா 2021- ஐ கொண்டு வரும் முயற்சியில் மத்தியஅரசு ஈடுபட்டுள்ளது. இந்த புதிய மசோதா குறித்து விவாதிப்பதற்காக வரும் ஜூன் 24- ஆம் தேதி மாநில அமைச்சர்களின் கூட்டத்திற்கு கடல்சார் மாநில மேம்பாடு கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த நிலையில் தான் மாநில முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "தற்போது நடைமுறையில் உள்ள இந்திய துறைமுகங்கள் 1908-இன் படி, சிறிய துறைமுகங்களின் கட்டுப்பாடு மாநிலத்தின் வசம் இருக்கிறது. ஆனால் ஒன்றிய அரசு கொண்டு வர இருக்கும் புதிய துறைமுக சட்டம், மாநில அரசின் பல அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் உள்ளது. இது வரை ஆலோசனை தெரிவிக்கும் அமைப்பாக இருந்த மாநில கடல்சார் மேம்பாடு கவுன்சிலுக்கு அதிகாரங்களை மாற்றும் வகையில் புதிய சட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த புதிய சட்டத்தால் சிறு துறைமுகங்களின் மேம்பாட்டில் பின்னடைவு ஏற்படும். புதிய துறைமுக சட்டம் நிறைவேற்றப்பட்டால் சிறு துறைமுகங்கள் மீது மாநில அரசுக்கு எந்தவித அதிகாரமும் இருக்காது. அனைத்து கடலோர மாநிலங்களும் புதிய துறைமுக சட்டத்திற்கு ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும். வரும் ஜூன் 24- ஆம் தேதி நடைபெற உள்ள கடல்சார் மாநில மேம்பாடு கவுன்சில் கூட்டத்தில் இந்த புதிய மசோதாவுக்கு எதிராக கருத்துத் தெரிவிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.