"சட்டப் போராட்டத்தின் மூலம் நீட்டை விரட்டுவோம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!

tamilnadu chief minister mkstalin statement for neet exam related

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14/09/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட் எனும் உயிர்க் கொல்லிக்கு அரியலூர் மாணவி கனிமொழி பலியாகியிருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. மாணவி அனிதா தொடங்கி கனிமொழி வரை மாணவச் செல்வங்களின் உயிர்ப் பலிக்கு இத்துடனாவது முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று மாணவச் சமுதாயத்தையும், அவர்களின் பெற்றோரையும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமின்றி, ஒரு சகோதரனாகவும் கைகளைப் பற்றிக் கொண்டு கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வினைத் தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறோம். அதற்கான சட்டப் போராட்டத்தையும் முழு வீச்சில் தொடங்கியிருக்கிறோம். பா.ஜ.க. தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடனும், ஒத்துழைப்புடனும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட முன்வடிவுக்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற்று, நீட் தேர்வை முழுமையாக நீக்கும் வரை இந்த சட்டப் போராட்டத்தில் எவ்வித சமரசமும் கிடையாது என்ற உறுதியினை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வழங்குகிறேன்.

நீட் தேர்வு என்பது தகுதியை எடைபோடும் தேர்வல்ல என்பதை, ஆள்மாறாட்டம், வினாத்தாள் விற்பனை, பயிற்சி நிறுவன தில்லுமுல்லுகள் உள்ளிட்ட பல மோசடிகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன. கல்வியில் சமத்துவத்தைச் சீர்குலைக்கும் நீட் தேர்வு நீக்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நமது அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்காகப் பல பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பும் பெற்றோர், தங்கள் வீட்டு மாணவச் செல்வங்கள் மனந்தளராதிருக்கும் பயிற்சியைத் தாங்களே அளித்து, அவர்கள் மனதில் நம்பிக்கையை வளர்த்திடக் கோருகிறேன். உயிர்காக்கும் மருத்துவப் படிப்புக்காக, தற்கொலை செய்து உயிர்விடும் அவலத்தைத் தடுத்திடுவோம். சட்டப் போராட்டத்தின் மூலம் நீட்டை விரட்டுவோம்.

மாணவி கனிமொழியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி இதுபோன்ற இன்னொரு இரங்கல் செய்திக்கு இடம் தராத சூழலை உருவாக்கிடுவோம்." இவ்வாறு முதலமைச்சர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

chief minister neet exam statement Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe