tamilnadu chief minister mkstalin statement

Advertisment

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (18/06/2021) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், "ஒன்றிய அரசு அனுமதி வழங்கியதும் மேகதாது அணை கட்டப்படும்" என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஒரு தலைப்பட்சமாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கின்ற நிலையில் அறிவித்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

இத்திட்டம் தமிழக விவசாயிகளின் நலனுக்கு விரோதமானது என்றும், உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கு கிடைக்கும் காவிரி நீரின் அளவினைக் குறைத்திடும் என்றும் கூறி தமிழக அரசு மிகக் கடுமையாக இத்திட்டத்தை எதிர்த்து வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பிரதமரிடம் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அத்தீர்மானத்தை 28/03/2015 அன்று நேரடியாக வழங்கியும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் இந்தப் புதிய அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசு தொடுத்த வழக்கும் நிலுவையில் உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இப்போது பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேரில் சந்தித்த போது, "மேகதாது அணைக் கட்டுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது" என வலியுறுத்தியிருக்கிறேன்.இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கின்ற சூழலில், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தன்னிச்சையாக இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருப்பது இரு மாநில நல்லுறவிற்கு எவ்வித்திலும் உகந்த ஒரு நிலைப்பாடு அல்ல என்பதோடு, தமிழகத்தையும், தமிழக விவசாயிகளையும் வஞ்சிக்க முயற்சிக்கும் செயலாகும்.

ஆகவே, தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக மக்களின் நலனுக்கும், உச்சநீதிமன்றத்தின் காவிரி இறுதித்தீர்ப்பிற்கும் எதிரான மேகதாது அணைக் கட்டும் முடிவினை கர்நாடக மாநில அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும், மேகதாது அணைக் கட்ட ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றும் தமிழகத்தின் சார்பில் எனது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு தமிழக முதலமைச்சர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.