TAMILNADU CHIEF MINISTER MKSTALIN MEET PM NARENDRA MODI IN DELHI

Advertisment

இன்று காலை (17/06/2021) சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இருந்து கார் மூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையம் வந்தார். அதைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்ற தமிழக முதலமைச்சருக்கு அமைச்சர்கள், தி.மு.க.வின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர்.

அதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காவல்துறை மரியாதை அளிக்கப்பட்டது. மேலும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி, தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சரை வரவேற்றனர்.

அதன் தொடர்ச்சியாக, டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17/06/2021) மாலை 05.00 மணிக்கு சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடனிருந்தார்.

Advertisment

இந்த சந்திப்பில், தமிழக வளர்ச்சித் திட்டங்கள், தமிழகத்திற்கு கூடுதல் கரோனா தடுப்பூசிகள், செங்கல்பட்டில் கரோனா தடுப்பூசித் தயாரிப்பதற்காக தடுப்பூசி உற்பத்தி மையத்தைச் செயல்பாட்டுக்கு கொண்டு வருவது, நீட் தேர்வு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரின் விடுதலை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள், மேகதாது அணை விவகாரம், கருப்பு பூஞ்சை மருந்து, மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை, ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் உள்ளிட்டவைக் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாக தகவல் கூறுகின்றன.

பிரதமர் நரேந்திர மோடி- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே சந்திப்பு 25 நிமிடங்கள் நடைபெற்றது.

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றப்பின் முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடியை மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.