
திருவள்ளூர் மாவட்டம், நேமம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வுசெய்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், "தளர்வில்லா முழு ஊரடங்கால் கடந்த இரண்டு நாட்களாக நல்ல பலன் கிடைத்துவருகிறது. கரோனா பரவும் சங்கிலியை உடைக்கவே முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. கரோனா தொற்றைத் தடுக்கும் பணியில் தமிழக அரசு முழு மூச்சாகச் செயல்படுகிறது. ஊரடங்கு போடப்பட்டதின் முழு பயனாக கரோனா தொற்றுப் பரவல் குறைந்துவருகிறது. நேற்று ஒரே நாளில் 2.24 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் தடுப்பூசி போடும் சராசரி விகிதம் உயர்ந்திருக்கிறது. திமுக ஆட்சியில் தினசரி பரிசோதனை சராசரியாக 1.64 லட்சமாக உள்ளது. கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் தொற்றைத் தடுக்கலாம். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனக் கெஞ்சிக்கேட்டுக்கொள்கிறேன்.
தடுப்பூசிதான் நமது காவல்காரனாக விளங்குகிறது என்பதால் மக்கள் தடுப்பூசிப் போட்டுக்கொள்ள வேண்டும். தேவையான தடுப்பூசிகள் கிடைத்தப் பின் தடுப்பூசி போடுவதை மக்கள் இயக்கமாக மாற்றத் திட்டமிட்டுள்ளோம். மக்கள் அனைவரும் முழு ஊரடங்கைக் கடைப்பிடித்து வீட்டிலேயே இருக்க வேண்டும். ஊரடங்கு போடப்பட்டதின் முழு பயனாக கரோனா தொற்று பரவல் குறைந்துவருகிறது. தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை; பற்றாக்குறை இருக்கும் இடத்தைக் கூறினால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும். தேவைப்பட்டால் முழு ஊரடங்கை நீட்டிக்கலாம் என சட்டமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. சட்டமன்றக் குழுவின் பரிந்துரைக் குறித்து ஆலோசித்து பின்னர் முடிவு எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.