
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றுவருகிறது. இன்றைய கூட்டத்தின்போது, இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் எனப்படும் சி.ஏ.ஏ. சட்டத்தை ரத்து செய்யக் கோரி பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசின் தனி தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.
அந்த தீர்மானத்தில், "குடியுரிமை திருத்தச் சட்டம் மதச்சார்பின்மைக் கோட்பாடு, மத நல்லிணக்கத்திற்கு உகந்ததாக இல்லை. அகதிகளாக வருவோரை மத ரீதியாகப் பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் சி.ஏ.ஏ. சட்டம் உள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தீர்மானத்தைக் கொண்டுவந்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "சி.ஏ.ஏ. சட்டம் இலங்கைத் தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட மாபெரும் துரோகம். இலங்கைத் தமிழர்களைப் பற்றி ஒன்றிய அரசு கவலைப்படவில்லை. சட்டப்படியான சமத்துவம், சட்டப்படியான பாதுகாப்பை அரசு மறுக்க முடியாது. சட்டத்திருத்தம் மதத்தை அடிப்படையாகக் கொண்டு குடியுரிமை வழங்க வகை செய்யும். சி.ஏ.ஏ. குறித்த தீர்மானத்தை ஆதரிக்க தைரியம் இல்லாததால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்" என்றார்.