tamilnadu chief minister awards anna medals 131 police

Advertisment

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினத்தையொட்டி, தமிழக காவல்துறை மற்றும் சீருடை அதிகாரிகள்/பணியாளர்கள்131 பேருக்குஅண்ணா பதக்கங்கள் வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, தமிழ்நாடு விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாகப்பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததைப் பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15- ஆம் நாள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு, காவல்துறையில் காவல் கண்காணிப்பாளர் முதல் முதல்நிலை காவலர் வரையிலான 100 அதிகாரிகள்/ பணியாளர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையில் துணை இயக்குநர் முதல் தீயணைப்பு வீரர் நிலை வரையிலான 10 அதிகாரிகள் / பணியாளர்களுக்கும், சிறைத்துறையில் உதவி சிறை அலுவலர் முதல் முதல்நிலை சிறைக்காவலர் வரையிலான 10 அதிகாரிகள்/ பணியாளர்களுக்கும், ஊர்க்காவல் படையில் மண்டல தளபதி முதல் ஊர்க்காவல் படைவீரர் வரையிலான 5 அதிகாரிகள்/ பணியாளர்களுக்கும் விரல்ரேகைப் பிரிவில் 2 துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் தடய அறிவியல் துறை பிரிவில் 2 அதிகாரிகள் முறையே உதவி இயக்குநர்/ அறிவியல் அலுவலர் ஆகியோருக்கு மெச்சத்தகுந்த பணியினை அங்கீகரிக்கும் வகையில் "தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள்" வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். பதக்கங்கள் பெறுகின்றவர்களுக்கு அவரவர் தம் பதவிக்கேற்றவாறு, பதக்க விதிகளின்படி வெண்கல பதக்கம் மற்றும் ஒட்டுமொத்த மானியத் தொகையும் அளிக்கப்படும்.

Advertisment

மேலும், தமிழக முதலமைச்சரின் வீரதீர செயலுக்கான தீயணைப்புத்துறை பதக்கம், 15/08/2020 அன்று திருநெல்வேலி சேவியர் காலனியில் உள்ள 70 அடி உயர மாநகராட்சி நீர்நிலைத் தொட்டி மேலிருந்து குதித்து தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்த எஸ். கணேசன் (வயது 45) என்பவரை காப்பாற்றியதற்காக, அம்மாவட்டம், பாளையங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்தைச் சார்ந்த எஸ்.வீரராஜ், நிலைய அதிகாரி மற்றும் எஸ்.செல்வம், தரம் உயர்த்தப்பட்ட முன்னணி தீயணைப்பு வீரர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. இருவருக்கும் தலா ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும்.

Ad

பின்னர்நடைபெறும் விழா ஒன்றில், பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இப்பதக்கங்களை முதலமைச்சர் வழங்குவார். இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.