'காலை 08.00 மணிக்கே வாக்கு எண்ணிக்கை' - தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்!

tamilnadu chief election officer tn assembly election

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எட்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஆறு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், ஏப்ரல் 26ஆம் தேதி ஏழாம் கட்ட வாக்குப்பதிவும், ஏப்ரல் 29ஆம் தேதி எட்டாம் மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த ஐந்து மாநிலங்களில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியுள்ளது.

இதையடுத்து, தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி அன்று காலை 08.00 மணிக்குத்தான் தொடங்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

மேலும், "காலை 08.00 மணிக்கு தபால் வாக்குகளும், காலை 08.30 மணிக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். சிறிய அறையாக இருந்தால், ஒரு அறைக்கு ஏழு மேஜைகள் என இரு அறைகளில் வாக்கு எண்ண ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கையை 14 மேஜைகளில் இருந்து குறைப்பது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை. எக்காரணத்தைக் கொண்டும் மேஜைகளின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது என அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர். முகவர்கள், வேட்பாளர்கள் ஆகியோருக்கு கரோனா பரிசோதனை செய்வது குறித்து ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 72 மணி நேரத்துக்கு முன் கரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பதால் விரைவில் அறிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறையுடன் ஆலோசனை செய்து வருகிறோம்". இவ்வாறு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

Chief Election Officer Satyabrata Sahoo tn assembly election 2021 VOTE COUNTING
இதையும் படியுங்கள்
Subscribe