
தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம், கேரளா, அசாம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது. அதன்படி, தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும், மேற்குவங்கம் மாநிலத்தில் 8 கட்டங்களாகவும், அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாகவும் தேர்தல் நடக்கிறது. இந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள், மே 2- ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
குறிப்பாக, தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக துணை ராணுவப் படையினர் வந்துள்ள நிலையில், அவர்கள் மாவட்ட வாரியாகப் பிரித்து அனுப்பப்படுகின்றனர். அனைத்துத் தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யும் பறக்கும் படை அதிகாரிகள், அதனை வீடியோ பதிவும் செய்கின்றனர்.
இந்த நிலையில், அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு உத்தரவிட்டுள்ளார். அதில், '2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் புகைப்பட வாக்காளர் சீட்டுக்குப் பதில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும். வாக்காளர் தகவல் சீட்டில் வாக்குச்சாவடி மையம், வாக்குப்பதிவு நாள், நேரம் இடம் பெற்றிருக்கும். இந்தத் தேர்தலில் வழங்கப்படும் வாக்காளர் தகவல் சீட்டில் வாக்காளர்களின் புகைப்படம் இடம்பெறாது. வாக்குப் பதிவுக்கு 5 நாட்களுக்கு முன்னரே வாக்காளர் தகவல் சீட்டை விநியோகிக்க வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.