ADVERTISEMENT

’தமிழக பா.ஜ.க. தலைவர்கள் காவிரி உரிமையை கேலி பேசுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்’ - பொன்முடி எச்சரிக்கை

10:13 PM Apr 01, 2018 | Anonymous (not verified)


பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தமிழகத்தின் உயிர்நாடிப் பிரச்சினையான காவிரி உரிமை குறித்து எள்ளி நகையாடி பேசி வருவதற்கும் - மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசி வருவதற்கும் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் க.பொன்முடி, எம்.எல்.ஏ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT


இது குறித்த அவரது கண்டன அறிக்கை: ’’பா.ஜ.க.வின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தமிழகத்தின் உயிர்நாடிப் பிரச்சினையான காவிரி உரிமை குறித்து எள்ளி நகையாடி பேசி வருவதற்கும், மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசி வருவதற்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை தூண்டிவிட்டு, மத வெறியை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைப்பது பா.ஜ.க.விற்கு கைவந்த கலை என்பது அனைவரும் அறிந்த உண்மை. இதை தமிழக மக்களும் அறிவார்கள். ஆனால் 69 வருடம் அரசியலில் ஜனநாய நெறிமுறைகளுக்கு உட்பட்டு எண்ணற்ற அறவழிப் போராட்டங்களை நடத்திய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டவுடன் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தால் ஸ்டாலின்தான் பொறுப்பு என்று பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

""பெரியார் சிலையை உடைப்போம்"" என்று எச். ராஜா அறிவித்ததும் தமிழகத்தில் பெரியார் சிலைகளை உடைத்து பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தது போல் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கிற்கு குந்தகம் விளைவித்து பொது அமைதியை குலைக்க பா.ஜ.க. சதி திட்டம் தீட்டியுள்ளதோ என்று தமிழிசை சவுந்திரராஜனின் பேச்சு சந்தேகிக்க வைக்கிறது. வன்முறை மூலம் வாக்குவங்கியை உருவாக்கும் கலை பா.ஜ.க.விற்கு சொந்தமானதே! திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில் பொறுப்புள்ள எதிர்கட்சி மட்டுமல்ல- எமெர்ஜென்சி போன்ற கடும் சோதனைகளையே ஜனநாய வழி நின்று அறவழியில் போராடி நாட்டிற்கே ஜனநாயக வழியிலான போராட்டத்தின் இலக்கணத்தை கற்றுக்கொடுத்த கட்சி என்பதை தமிழிசை போன்றவர்கள் மறந்து விடக்கூடாது என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஆகவே, வன்முறையை தூண்டும் வகையிலும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் தமிழக பா.ஜ.க. திரைமறைவு சதித்திட்டங்களில் ஈடுபடுகிறதா என்பதை உள்துறை செயலாளரும், மாநிலக் காவல்துறை தலைவரும் உடனடியாக விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அழுத்தம் கொடுக்க முடியாத தமிழக பா.ஜ.க. தலைவர்கள் காவிரி உரிமையை கேலி பேசுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.’’


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT