'திட்டமிட்டப்படி வாக்கு எண்ணிக்கை' - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!

tamilnadu assembly election vote counting chief election officer

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அதேபோல் மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஏழு கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், நாளை மறுநாள் (29/04/2021) எட்டாம் மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதைத் தொடர்ந்து, ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு, அன்றே முடிவுகளும் அறிவிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் மே 2ஆம் தேதி அன்று வாக்கு எண்ணும்போதும், முன்னிலை பெறும்போதும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் அரசியல் கட்சியினரின் கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், "தமிழகத்தில் மே 2ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி நடக்கும். வாக்கு எண்ணிக்கையைத் தள்ளி வைப்பது தொடர்பாக எந்த ஆலோசனையும் இல்லை. வாக்கு எண்ணிக்கையைத் தள்ளி வைக்க உள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. மே 1ஆம் தேதி மற்றும் மே 2ஆம் தேதி அன்று ஊரடங்கு அறிவிப்பது தொடர்பாகவும், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத்துறையுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்." இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

Chief Election Officer Satyabrata Sahoo tn assembly election
இதையும் படியுங்கள்
Subscribe