Skip to main content

'திட்டமிட்டப்படி வாக்கு எண்ணிக்கை' - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!

Published on 27/04/2021 | Edited on 27/04/2021

 

tamilnadu assembly election vote counting chief election officer

 

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அதேபோல் மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஏழு கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், நாளை மறுநாள் (29/04/2021) எட்டாம் மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

 

அதைத் தொடர்ந்து, ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு, அன்றே முடிவுகளும் அறிவிக்கப்படுகின்றன.

 

இந்த நிலையில், கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் மே 2ஆம் தேதி அன்று வாக்கு எண்ணும்போதும், முன்னிலை பெறும்போதும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் அரசியல் கட்சியினரின் கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

 

இந்நிலையில், "தமிழகத்தில் மே 2ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி நடக்கும். வாக்கு எண்ணிக்கையைத் தள்ளி வைப்பது தொடர்பாக எந்த ஆலோசனையும் இல்லை. வாக்கு எண்ணிக்கையைத் தள்ளி வைக்க உள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. மே 1ஆம் தேதி மற்றும் மே 2ஆம் தேதி அன்று ஊரடங்கு அறிவிப்பது தொடர்பாகவும், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத்துறையுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்." இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எம்.எல்.ஏக்களுக்கு கார் வேண்டும்'- கோரிக்கை வைத்த நயினார் நாகேந்திரன்!

Published on 22/04/2022 | Edited on 22/04/2022

 

'MLAs need cars' - Nayyar Nagendran demands!

 

2022-23ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற மானியக்கோரிக்கை விவாதத்தில் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசுகையில், ''பேரவைத் தலைவர் அவர்களே உள்ளாட்சி அமைப்புகளுக்கு வலுசேர்க்கும் வகையில் முதல்வர் கொடுத்த அறிவிப்பை உண்மையில் மனதார வரவேற்கிறேன். அதேநேரம் முதல்வரின் பார்வை இப்பொழுதுதான் ஊராட்சி உறுப்பினர்கள், பஞ்சாயத்து சேர்மன், ஊராட்சி மன்ற பெருந்தலைவர் வரை வந்திருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர் வரை அந்த பார்வை வரவில்லை என்ற ஆதங்கம் எல்லோரிடமும் இருக்கிறது. ஆகவே எனக்குக்கூட வேண்டாம் தேவைப்படுகின்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நீங்கள் ஒரு கார் கொடுத்து உதவினால் அது மிகவும் நன்றாக இருக்கும் சிந்தித்து பார்க்கலாம். எல்லா சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பிலோ அல்லது முடிந்த அளவு வட்டியில்லாக் கடன் மூலமாவது கார் வழங்க வேண்டும் என்று இந்த அவையில் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

 

அப்பொழுது பேசிய சபாநாயகர் அப்பாவு, ''மத்திய அரசிடம் நீங்க கொஞ்சம் பரிந்துரை செய்து பணம் வாங்கி கொடுத்துருங்க'' எனக் கூற அவையில் சிரிப்பொலி ஏற்பட்டது.

 

 

Next Story

கமல்ஹாசன் போட்டியிட்ட தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி வழக்கு!

Published on 14/05/2021 | Edited on 14/05/2021

 

 

coimbatore south assembly constituency recounting chennai high court


கமல்ஹாசன் போட்டியிட்ட சட்டமன்றத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

 

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன், அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி  சார்பில் பா.ஜ.க.வின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மயூரா ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்கள், அரசியல் கட்சிளைச் சேர்ந்த வேட்பாளர்கள் என மொத்தம் 21 பேர் போட்டியிட்டனர்.

 

இதில் பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசன் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் கமல்ஹாசனை வீழ்த்தினார்.

 

இந்த நிலையில், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட இந்துஸ்தான் ஜனதா கட்சியின் தென்மண்டலத் தலைவர் கே.ராகுல் காந்தி தனது தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

அவரது மனுவில், "மின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடி செய்ததால் பா.ஜ.க.வின் வானதி சீனிவாசன் வெற்றிப் பெற்றுள்ளார். எனவே மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும்" என்று கோரியுள்ளார். இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சுயேச்சையாகப் போட்டியிட்ட கே.ராகுல் காந்தி 73 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.