Skip to main content

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அதிகாரிகள் நியமனம்!

Published on 26/01/2021 | Edited on 26/01/2021

 

tamilnadu assembly election chief election officer

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கானப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது இந்திய தலைமை தேர்தல் ஆணையம். அதேபோல், தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ளனர்.

 

இந்த ஐந்து மாநிலத்தில் சட்டப்பேரவையின் பதவிக்காலம் முதலில் நிறைவடையும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் வகையில் வாக்காளர்கள் பட்டியலில் திருத்தும், பெயர் சேர்த்தல் உள்ளிட்டப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு. அதேபோல், அவ்வப்போது தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

 

அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை நடத்த 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகளை நியமித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு உத்தரவிட்டுள்ளார். மேலும், 234 தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் விவரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே, வட மாநிலங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.