Advertisment

21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

tamilnadu assemble speaker dmk mlas chennai high court

சட்டப் பேரவைக்குள் குட்கா பொருட்களைக் கொண்டு சென்றதாக, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

Advertisment

கடந்த 2017- ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததாக, பேரவை உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸை எதிர்த்து, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீஸில் அடிப்படைத் தவறுகள் உள்ளதாகக் கூறி, அதை ரத்து செய்தது. எனினும், தவறுகளை களைந்து புதிய நோட்டீஸ் அனுப்பலாம் எனவும் தெரிவித்திருந்தது.

Advertisment

இதையடுத்து, உரிமைக்குழு கூடி மீண்டும் அனுப்பிய இரண்டாவது நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 தி.மு.க. எம்.எல்.ஏ-க்களும், தி.மு.க.விலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட கு.க.செல்வமும் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீஸுக்கு இடைக்காலத்தடை விதித்த நிலையில், இடைக்காலத்தடையை நீக்கக்கோரி சட்டப்பேரவை செயலாளர் மற்றும் உரிமைக்குழு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் இறுதி விசாரணை, நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா முன்பு நடைபெற்றது.

கடந்த 2- ஆம் தேதி, சட்டப்பேரவை செயலாளர் சார்பில், அரசின் மூத்த வழக்கறிஞர் சோமையாஜி ஆஜராகி வாதிட்ட நிலையில், இன்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண்,உரிமைக்குழு சார்பில் ஆஜராகி வாதாடியபோது, "உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவுப்படி, ஏற்கனவே வழங்கப்பட்ட நோட்டீஸில் இருந்த தவறுகள் திருத்தப்பட்டு, உரிமைக்குழு புதிய நோட்டீஸை வழங்கியுள்ளது. உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸில், ‘தடை செய்யப்பட்ட குட்கா பொருளைக் கொண்டு வந்து காட்சிப்படுத்தியதற்கு’ எனச் சுட்டிக்காட்டப்பட்டது. தற்போது அனுப்பப்பட்டுள்ள இரண்டாவது நோட்டீஸில் சபாநாயகரின் அனுமதியின்றி குட்கா பொருளைக் காண்பித்ததற்காக’எனத் திருத்தப்பட்டுள்ளது. அவை செயல்படுவதற்கு குந்தகம் ஏற்படுத்தியதால், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்த சபாநாயகர், உரிமைக்குழு விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். அதன் பேரிலேயே, தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "எந்தெந்த பொருட்களைக் கொண்டு வருவதற்கு முன் அனுமதி பெற வேண்டுமென ஏதேனும் வழிமுறை உள்ளதா?’ எனக் கேள்வி எழுப்பிய நிலையில், அரசுத் தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ‘எது உரிமை, எது உரிமை மீறல் என்பது, ஏதும் பாராளுமன்றத்தாலோ, சட்டமன்றத்தாலோ வரையறை செய்யப்படவில்லை. மரபு மற்றும் பாரம்பரிய நடைமுறைகளின் அடிப்படையில் அவை முடிவு செய்யப்படுகிறது.ஒரு வழக்கறிஞர், நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது புகை பிடிக்கக்கூடாது என எந்த விதியும் இல்லாதபோதும், அது நீதிமன்றத்தில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை ஒழுக்கம் என்பதைப் போல்தான், சட்டமன்ற நடவடிக்கையும். பேச்சுரிமை என்ற போர்வையில், தடை செய்யப்பட்ட பொருளை ஊக்குவிக்கும் வகையிலான செயலை, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேற்கொண்டுள்ளனர். இது சட்டப்பேரவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும். சபாநாயகர் உரிமைக்குழுவுக்கு பரிந்துரைத்துள்ள நிலையில், உரிமைக்குழு அதன் முடிவை பேரவையில் தாக்கல் செய்யும். அதன் பின்னர், பேரவைதான் இதில் இறுதி முடிவெடுக்கும். பேரவையின் இறுதி முடிவை எதிர்த்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வழக்கு தொடரும் பட்சத்தில், அப்போதுதான் இதில் நீதிமன்றம் தலையிட முடியும். தற்போது இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முகாந்திரம் இல்லை" என வாதிட்டார்.

தொடர்ந்து, அரசுத் தரப்பின் வாதத்திற்கு விளக்கமளித்த தி.மு.க. தரப்பு வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், என்.ஆர் இளங்கோ, அமித் ஆனந்த் திவாரி மற்றும் கு.க செல்வம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர்,‘உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸை தலைமை நீதிபதி அமர்வு ரத்து செய்தபோது, இந்த விவகாரம் நடந்து (2017) மூன்றாண்டுகள் ஆகி விட்டதால், அதனை அடிப்படையாக வைத்து தற்போது தண்டிக்க முடியாது எனத் தெரிவித்தது. தற்போதைய நிலையிலும், தலைமை நீதிபதி அமர்வின் உத்தரவைப் பொருத்திப் பார்க்க வேண்டும். உரிய காரணங்கள் ஏதுமின்றி சபாநாயகர் பரிந்துரைத்தார் என்ற காரணத்திற்காக மட்டுமே, உரிமைக்குழு இந்த விவகாரத்தில் தங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸில், தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வந்ததாகச் சுட்டிக்காட்டப்பட்டு, அது உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது சபாநாயகர் அனுமதி இல்லாமல் கொண்டு வந்தார்கள் எனப் பெயருக்கு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. உரிமைக்குழுத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீது உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளதாலும், ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. சார்பில் வழக்கு தொடர்ந்துள்ளதாலும், காழ்ப்புணர்ச்சி வெளிப்படக்கூடும் என்பதால், உரிமைக் குழுவில் இருந்து தாங்களாகவே ஒ.பி.எஸ் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் விலகிக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் சபாநாயகர் புதிய குழுவை அமைத்துக் கொள்ளட்டும்.’எனத் தெரிவித்தனர்.

தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

chennai high court dmk mlas tn govt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe