Skip to main content

மணிப்பூர் கலவரத்திற்கு அஞ்சி சென்னையில் தஞ்சமடைந்த தமிழர்

Published on 28/07/2023 | Edited on 28/07/2023

 

Tamil who came to Tamil Nadu from Manipur with his family

 

மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி, குக்கி என இரு பிரிவினருக்கு இடையே கடந்த மே மாதம் முதல் ஓயாத கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

மேலும், நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்குத் தெரியவந்துள்ளது. இந்தக் கொடூர சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்திலும் பல இடங்களில் இதற்குக் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் தொடர்ந்து மூன்று முறை மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்துள்ளது.

 

இந்த நிலையில், மணிப்பூரில் வசித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த சோசப் என்பவர் வன்முறையால் பாதிக்கப்பட்டதால் தனது குடும்பத்துடன் தமிழகம் வந்துள்ளார். மேலும் அவர், தங்களுக்கு உதவ அரசு முன்வரவேண்டும் என்று சென்னை தலைமைச் செயலகத்திற்குச் சென்று அங்குள்ள முதல்வர் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார். அவர் அளித்த அந்த மனுவில், “நான் மணிப்பூர் சுகுனு என்ற இடத்தில் வசித்து வரும் மலைவாழ் தமிழனாகும். நான் அந்த மாநிலத்திற்கு என்னுடைய சிறு வயதிலேயே சென்றுவிட்டேன். மேலும், அந்த மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து அங்கேயே வசித்து வந்தேன். எங்களுக்கு 5 பிள்ளைகள் இருக்கின்றனர். நான், எனது மனைவி, மருமகள், ஒரு பேரக்குழந்தை என 9 பேர் மணிப்பூரில் வசித்து வந்தோம். கடந்த மே மாதம் 28 ஆம் தேதி ஏற்பட்ட கலவரத்தின் போது, எங்கள் வீட்டை தீ வைத்து எரித்து, எங்களை விரட்டி அடித்து விட்டனர்.

 

எங்களின் வீடு, உடைமைகள், எல்லாவற்றையும் இழந்து, போகும் இடம் தெரியாமல் காடுகளில் இருந்தோம். அதன் பின்னர், கவுகாத்தி சென்றோம். தமிழ் பேசத் தெரிந்ததால் அங்கிருந்து சென்னைக்கு வந்து விடலாம் என்று முடிவு செய்தபின் ஒரு ராணுவ வீரர் எங்களுக்கு உதவி அளித்தார். சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அலைந்து திரிந்தபோது எங்களுக்கு ஒருவர் உதவ முன்வந்தார். அவரது உதவியினால், நாங்கள் தற்போது செங்குன்றத்தில் ஒரு சிறிய வீட்டில் தங்கி இருக்கிறோம். மணிப்பூரில் நாங்கள் நல்லபடியாக வசித்து வந்தோம். ஆனால், தற்போது பச்சிளம் குழந்தையுடன் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.  எனவே, இந்தக் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு எங்களுக்குத் தகுந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறப்பட்டிருந்தது.

 

 

சார்ந்த செய்திகள்