Tamil translation of EIA report is ready! -  Government Information

Advertisment

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையின் தமிழ் மொழி பெயர்ப்பு தயாராக உள்ளதாக, மத்திய அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை, பிராந்திய மொழிகளில் வெளியிட, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரியும், அதுவரை வரைவு அறிக்கைக்குத் தடை விதிக்கக் கோரியும்,மீனவர் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு,நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பாக, கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை, தமிழில் வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? உள்ளாட்சி அமைப்புகளின் இணையத்தளங்களில் வெளியிட முடியுமா? என்பது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

Advertisment

இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையின் தமிழ் மொழி பெயர்ப்பு தயாராக உள்ளது.இது சம்பந்தமாக, எழுத்துப் பூர்வமான விளக்கத்தைத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும். மேலும், இந்த வரைவு அறிக்கை தொடர்பாக, பல்வேறு உயர் நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதாகக்குறிப்பிட்டார்.

இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை ஆகஸ்ட் 19-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து, எழுத்துப் பூர்வமான விளக்கத்தைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையின் தமிழ் மொழி பெயர்ப்பு என வாட்ஸ் ஆப்-பில் செய்தி பரவுவதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், அது அதிகாரப்பூர்வமானதா என்பதற்கு விளக்கமளிக்க வேண்டும் என்று கூறினர்.