ADVERTISEMENT

திண்டுக்கல் இலங்கை அகதிகள் முகாமில் குடிதண்ணீர், கழிப்பிட வசதிகள் இல்லை!!! அவதிப்படும் இலங்கை தமிழர்கள்...

11:30 PM Dec 17, 2018 | sakthivel.m


திண்டுக்கல்லிலிருந்து நத்தம் செல்லும் சாலையில் சிறுமலை பிரிவு அருகே அடியனூத்து ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இலங்கையில் வவுனியா, முல்லைதீவு, கிளிநொச்சி, யாழ்பானம், திரிகோணமலை ஆகிய பகுதிகளிலிருந்து அகதிகளாக வந்தவர்களை 1990ம் வருடம் அவர்களுக்கு 9ஏக்கர் நிலம் ஒதுக்கி குடியிருப்பு அமைத்துக் கொடுத்தனர். 170 குடியிருப்புகளில் 1700 பேர் வசிக்கின்றனர். ஒரு ஆழ்துளை கிணறு அமைத்துக்கொடுத்து 9 இடங்களில் சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி வைத்து கொடுத்திருந்தனர். ஆரம்பத்தில் 10சதுரஅடி இடம் ஒதுக்கி தார் அட்டையில் மேற்கூரை அமைத்து கொடுத்திருந்தனர். நாளடைவில் வெயிலினால் அட்டைகள் உடைந்து விட்டன. அதன்பின்னர் தற்போது தென்னங்கீற்றில் குடிசைகளை அமைத்துள்ளனர். அடியனூத்து ஊராட்சி சார்பாக ஆழ்துளை கிணற்றிலிருந்து வழங்கப்பட்ட குடிதண்ணீர் கடந்த 9மாத காலமாக வழங்கப்படாததால் அவர்கள் 3 குடம் குடிதண்ணீர் ரூ.10க்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய அவல நிலையில் உள்ளனர்.

ADVERTISEMENT


இது தவிர அவசர தேவைக்காக 6கி.மீ தூரம் உள்ள ரெட்டியபட்டியிலிருந்து இருசக்கர வாகனம் மூலம் குடிதண்ணீரை எடுத்து வருகின்றனர். இலங்கை அகதிகள் முகாமிற்கு அடியனூத்து ஊராட்சி நிர்வாகம் துப்புறவு பணியாளர்களை கடந்த 3மாத காலமாக அனுப்பாததால் குப்பைகள் முகாமை சுற்றி மலைபோல் குவிந்துள்ளன. தண்ணீர் வசதி இல்லாததால் கழிப்பறைகள் செயல்பாடின்றி உள்ளது. இதனால் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் 1700 பேரும் சுற்றியுள்ள பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்த வேண்டிய அவல நிலையில் உள்ளனர். இதனால் அவர்களுக்கு தொற்றுநோய் ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். இது தவிர முகாமிற்குள் பன்றிகள் சர்வசாதாரமாக சுற்றித்திரிவதால் பன்றிக்காய்ச்சல் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலமாக அப்பகுதியில் பன்றி ஒன்று இறந்து கிடக்க அதை அப்புறப்படுத்தாமல் விட்டுவிட்டதால் முகாமின் வடக்குப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இலங்கையிலிருந்து அகதிகளாக வந்தவர்கள் குடிதண்ணீருக்காக தினமும் கண்ணீர் வடிக்கும் நிலையில் உள்ளனர்.


ADVERTISEMENT


இது குறித்து இலங்கை அகதிகள் முகாம் செயலாளர் ரஞ்சித் கூறுகையில் 1990ம் ஆண்டு முதல் இப்பகுதியில் குடியிருந்து வருகிறோம் எங்களுக்கு குடிதண்ணீர் வசதி முறையாக இல்லாததால் தினசரி கடும் அவதிப்படுகின்றோம். மாவட்ட ஆட்சித்தலைவர் தகுந்த நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியில் உள்ள மைதானத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்தி குடிதண்ணீர் கிடைக்கச் செய்யவேண்டும் என்றார்.


சுஜீவன் - இலங்கை அகதிகள் முகாம் பொருளாளர் கூறுகையில், எங்கள் முகாமில் உள்ள அனைவரும் கூலித்தொழிலாளர்கள் தினசரி ரூ.30 முதல் ரூ.40 வரை குடிதண்ணீருக்கு செலவிடவேண்டிய அவலநிலையில் உள்ளனர். ஊராட்சி நிர்வாகம் எங்கள் இலங்கை அகதிகள் முகாமிற்கு புதிய ஆழ்துளை கிணறு அமைத்துக்கொடுக்க வேண்டும் என்றார். நத்தம் மெயின்ரோட்டில் காவேரி கூட்டுகுடிநீர் திட்டம் குடிதண்ணீர் குழாய்கள் மூலம் செல்கிறது. அங்கிருந்து எங்களுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.


பாக்கியநாதன் இலங்கை அகதி கூறுகையில் எங்கள் மக்களுக்கு தமிழக அரசு மாதம்தோறும் நிவாரண உதவித்தொகை ஆண்களுக்கு ரூ.1000மும் பெண்களுக்கு ரூ.750ம் வழங்கி வந்தது. கடந்த ஒருவருட காலமாக அந்த உதவித்தொகையை நிறுத்தி வைத்துள்ளனர். அதை எங்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றார்.
சசிகலா இலங்கை அகதி கூறுகையில் எங்கள் முகாம் பெண்கள் குடிதண்ணீர் பிரச்சனையால் வாரம் ஒருமுறைதான் குளிக்க கூடிய அவலத்தில் உள்ளனர். மாவட்ட ஆட்சித்தலைவர் தகுந்த நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியின் குடிதண்ணீர் பிரச்சனையை தீர்க்கவேண்டும் என்றார். கழிப்பறை வசதி இல்லாததால் பெண்கள் பகல் நேரத்தில் கடும் சிரமப்படுகின்றனர். திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் எங்கள் பகுதி குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவி வருகிறது என கூறினார்.


செல்வநாயகி இலங்கை அகதி கூறுகையில், 1990ம் ஆண்டு கண்ணீருடன் இந்தியா வந்தோம் எங்களுக்கு திண்டுக்கல்லில் தங்க இடம் கொடுத்தார்கள். ஆனால் இன்றுவரை குடிதண்ணீருக்காக கண்ணீர் விட்டுதான் வருகிறோம் எங்களை யாரும் கண்டுகொள்வதில்லை. சமூக ஆர்வளர்கள், தொண்டுநிறுவனங்கள் எங்கள் முகாமில் வசிக்கும் 1700 பேரின் நலன் கருதி புதிய ஆழ்துளை கிணறு அமைத்துக்கொடுத்தால் எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என கண்ணீர் மல்க கூறினார்.


அடியனூத்து ஊராட்சி நிர்வாகம் இலங்கை அகதிகள் முகாமை கண்டுகொள்ளாததால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவுகிறது. மேலும் திறந்தவெளியில் மலம் கழிப்பதை ஒழிக்கும் திட்டமும் வீனாகிவருகிறது. மத்திய அரசின் இந்த திட்டம் இலங்கை அகதிகள் முகாமில் முடங்கிப்போய் உள்ளது. மாவட்ட ஆட்சியர், மாவட்ட திட்ட அலுவலர், தூய்மை இந்தியா திட்டத்தை இலங்கை அகதிகள் முகாமில் செயல்படுத்தினால் அப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT