Skip to main content

என்.எல்.சி. நிறுவனத்தைக் கண்டித்து தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்!

Published on 09/02/2021 | Edited on 09/02/2021

 

Tamil Periyakkam struggle in Virudhachalam condemning NLC !!

 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில், காலியாகவுள்ள 259 பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த 13.03.2020 அன்று நிறுவன இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதற்கு 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அந்நிறுவனம் நேர்முகத் தேர்வுக்குத் தேர்வானவர்கள் 1,582 பேர் என 30.01.2021 அன்று இணையத்தில் பட்டியல் வெளியிட்டது.

 

இந்த 1,582 பேரில், தமிழகத்தைச் சேர்ந்த வெறும் 8 பேர் மட்டுமே தேர்வாகியுள்ளனர். என்.எல்.சி. நிறுவனத்தில் இந்த தமிழர் விரோதப் போக்கிற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பல்வேறு தமிழ் அமைப்புகளும், பொதுநல அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

 

இந்நிலையில் என்.எல்.சி. நிறுவனம் தமிழர்களைப் புறக்கணிப்பதைக் கண்டித்தும், பட்டதாரி பொறியாளர் நேர்முகத் தேர்வை ரத்து செய்யக் கோரியும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் வழங்கிய நிலத்தில் இயங்கும் என்.எல்.சி. நிறுவனம் நிலம் கொடுத்தவர்கள், அந்நிறுவனத்தின் பணியிலிருந்து இறந்தவரின் வாரிசுகள், பழகுனர் பயிற்சி முடித்தவர்கள் என அனைவரையும் முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு தொடக்க ஊதியமே 60 ஆயிரம் ரூபாய் உள்ள நிரந்தரப் பணியில் வட மாநிலத்தவர்களைத் தேர்வுசெய்து, சேர்ப்பது திட்டமிட்டு தமிழர்களைப் புறக்கணிக்கும் செயல். இது கண்டனத்துக்குரியது.

 

Tamil Periyakkam struggle in Virudhachalam condemning NLC !!

 

என்.எல்.சி. நிறுவனம் நேர்முகத் தேர்வை ரத்து செய்து விட்டு, புதிதாக விளம்பரம் வெளியிட்டு இப்பணிகளுக்கு 90 விழுக்காடு தமிழ்நாட்டு மக்களுக்கு முன்னுரிமை அளித்து மீண்டும் நடத்த வேண்டும் என்றும், அவ்வாறு என்.எல்.சி. தமிழர்களைப் புறக்கணித்தால் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட நேரிடும் எனவும் வலியுறுத்தப்பட்டது. தமிழ்த் தேசியப் பேரியக்க மாநில செயற்குழு உறுப்பினர் க.முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

 

ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு என்.எல்.சி. நிறுவனத்தின் தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்தும், தமிழர்களைப் புறக்கணித்து நடத்தப்பட்ட தேர்வினை ரத்து செய்து புதிதாக தேர்வு நடத்தக் கோரியும் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் மனித நேயப் பேரவை அமைப்பாளர் பஞ்சநாதன், தமிழ்த் தேசியப் பேரியக்க நிர்வாகிகள் குபேரன், மணிமாறன், பிரகாசு, பொன்னிவளவன், சின்னமணி, மகளிர் ஆயம் நிர்வாகிகள் கனிமொழி, தமிழ்மொழி, செந்தமிழ்ச்செல்வி, இளநிலா உள்ளிட்டோர் கலந்துகொண்டு என்.எல்.சி நிறுவனத்தைக் கண்டித்து கண்டன உரையாற்றினார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மணல் மேட்டிலிருந்து வெளியேறும் வெள்ளத்தால் வீடுகள், விவசாய நிலங்கள் சேதம்!

Published on 11/11/2021 | Edited on 11/11/2021

 

Damage to houses and agricultural lands due to floods coming out of the sand dunes

 

கடலூர் மாவட்டம் நெய்வேலியிலுள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் திறந்தவெளி சுரங்கங்களின் மூலம் பழுப்பு நிலக்கரி வெட்டப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய தென்னிந்திய மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. நிலக்கரி சுரங்கங்களில் வெட்டப்படும் மண்ணானது, நெய்வேலி பகுதியைச் சுற்றி மலைபோல் குவித்துவைக்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழையால் மலைபோல் குவித்துவைக்கப்பட்டுள்ள மணல் மேட்டிலிருந்து வெளியேறக் கூடிய மழைநீர், காட்டாற்று வெள்ளம் போல் கிராமப் பகுதிகளில் உள்ள வீடுகளையும், விவசாய விளைநிலங்களையும் மூழ்கடித்துவருகிறது. மேலும், மணல்மேட்டின் ஒரு பகுதியான கம்மாபுரம், கீணனூர், கோபாலபுரம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் என்.எல்.சி. நிறுவனத்தால் அமைக்கப்பட்டிருந்த வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயிரிட்டிருந்த நெற்பயிர்கள் முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கின.

 

Damage to houses and agricultural lands due to floods coming out of the sand dunes

 

இதனால் பயிர்கள் அழுகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், மணல் மேட்டிலிருந்து வரக்கூடிய மழை நீருடன், சவுட்டுத் தன்மைகொண்ட மணலும் விவசாய நிலங்களில் படிவதால் மண்ணின் வளம் முற்றிலுமாக மாறுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதேபோல், மணல்மேட்டின் மறுபகுதியான ஊமங்கலம், வெளிக்கூணங்குறிச்சி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் வாய்க்கால்கள் சரியாக அமைக்கப்படாததால், காட்டாற்று வெள்ளம் போல் மழை நீரானது கிராமப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துவருவதால் பொதுமக்கள் செய்வதறியாமல் திகைத்துவருகின்றனர்.

 

மேலும், வீட்டில் உள்ள உணவுப் பொருட்கள் அனைத்தும் நனைந்து சேதமடைந்துள்ளது. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் வசிப்பதற்குப் போதிய இடம் இல்லாமல் தவித்துவருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி. நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும், மணல் மேட்டில் அமைக்கப்பட்டுள்ள வாய்க்காலைத் தூர்வாரி, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை உடனடியாக பாதுகாக்கவில்லை என்றால், தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்துவிடும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

 

 

Next Story

என்.எல்.சி புதிய அனல் மின் நிலையத்தில் வர்த்தக ரீதியாக மின் உற்பத்திக்கு அரசு அனுமதி!! சூரிய ஒளி மின் உற்பத்தியிலும் சாதனை...

Published on 12/02/2021 | Edited on 12/02/2021

 

Government approves commercial power generation at NLC's new thermal power plant !! Achievement in solar power generation ...

 

நெய்வேலி புதிய அனல் மின் நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி பிரிவிலிருந்து வர்த்தக ரீதியாக மின் சக்தியை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் மணிக்கு 10 லட்சம் யூனிட் (1000 மெகாவாட்) மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அனல் மின் நிலையத்தில் 500 மெகாவாட் கொண்ட முதல் மின் உற்பத்தி பிரிவு வர்த்தக ரீதியான மின்சக்தியை விற்பனை செய்ய 2019 டிசம்பர் 28-ஆம் தேதி தகுதிபெற்றது. அதனைத் தொடர்ந்து 500 மெகாவாட் திறன் கொண்ட இரண்டாவது பிரிவும் நேற்று முன்தினம் (10.02.2021) நள்ளிரவு முதல் மின்சக்தியை விற்பனை செய்ய மத்திய அரசிடமிருந்து அனுமதியைப் பெற்றுள்ளது.

 

இதன்மூலம் ‘அனல்மின் திட்டம்’ என்ற நிலையில் இதுவரை இருந்து வந்த இந்த மின் நிலையம், தற்போது ‘அனல் மின் நிலையம்’ என்ற தகுதியைப் பெற்றுள்ளது. இந்தப் புதிய அனல் மின்நிலையம் வர்த்தக ரீதியாக இயங்க அனுமதி பெற்றதன் மூலம் என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் அனல்மின் உற்பத்தி அளவானது அதன் துணை நிறுவனங்களையும் சேர்த்து மொத்தம் 4,640 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சார்ந்த மின்சக்தி நிலையங்களையும் சேர்த்து மொத்த மின் உற்பத்தி அளவு 6,061 மெகா வாட்டாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சூரிய ஒளி மின் உற்பத்தி கடந்த ஆண்டை விட 61.60 சதவீதம் வளர்ச்சி பெற்று என்.எல்.சி இந்தியா நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.

 

Government approves commercial power generation at NLC's new thermal power plant !! Achievement in solar power generation ...

 

நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் 144 கோடியே 53 லட்சத்து 90 ஆயிரம் யூனிட் சூரிய ஒளி மின்சக்தியை உற்பத்தி செய்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே கால அளவை ஒப்பிடுகையில் 60.60 சதவீத வளர்ச்சியாகும். நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் என்.எல்.சி மின்நிலையங்களில் 1,374 கோடியே 27 லட்சத்து 40 ஆயிரம் யூனிட் மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நெய்வேலி புதிய அனல் மின் நிலையத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட முதல் மின் உற்பத்தி பிரிவில் சில மாதங்களும், 709 மெகாவாட் திறன் கொண்ட சூரியஒளி மின் நிலையங்களில் 9 மாதங்களும் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 6,110 கோடியே 99 லட்சம் ரூபாய் மொத்த வருவாய் வருவாயும், நிகர லாபமாக 386 கோடியே 99 லட்சம் ரூபாயும் என்.எல்.சி இந்தியா நிறுவனம் ஈட்டியுள்ளது.