
இந்தியப் பிரதமரின் பாராட்டுகளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்தது முன்னாள் முதல்வர் கலைஞர் வழங்கிய (சுய உதவிக்குழுக்களுக்கான) சுழல் நிதியே காரணம் என சுய உதவிக்குழு பொறுப்பாளர் ஜெயந்தி புகழாரம் சூட்டினார். அதேபோல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது எங்களுக்கு வழங்கிய சுய உதவிக் குழுக்களுக்கான கடனுதவி மறக்க முடியாதது என்றார். இந்தியப் பிரதமரான மோடி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட சில பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் காணொளி மூலம் கலந்துரையாடல் செய்தார்.
அதன்படி உத்திரப்பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் பயனாளிகளுடன் காணொலி மூலம் பேசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தொகுதியில் இருக்கும் என்.பஞ்சம்பட்டி ஊராட்சி அளவிலான சுய உதவிக்குழு கூட்டமைப்பு தேர்வு செய்யப்பட்டது. இந்த கூட்டமைப்பு 2010ம் வருடம் முதல் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்து அதைப் பயனுள்ள பொருட்களாக மாற்றுவதோடு, கிராமத்தின் சுகாதாரத்திற்குப் பேருதவியாக இருந்து வருகிறது.

என்.பஞ்சம்பட்டியில் நடைபெற்ற காணொளி காட்சியில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி ,சுய உதவிக்குழு கூட்டமைப்பு பொறுப்பாளர் ஜெயந்தியை பாராட்டியதோடு, இந்தியாவில் உள்ள மற்ற சுய உதவிக்குழுக்களும் இவர்களைப் போல் கிராம வளர்ச்சிக்குப் பாடுபட வேண் டும் எனக் கூறினார். இதுபற்றி என்.பஞ்சம்பட்டி சுய உதவிக்குழு கூட்டமைப்பு பொறுப்பாளர் ஜெயந்தியிடம் கேட்டபோது, “தமிழகத்தில் முதன்முறையாக சுழல்நிதி வழங்கியவர் முன்னாள் முதல்வர் கலைஞர். அவரது ஆட்சியின் போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கினார்.
இதுபோல அப்போதைய வருவாய்த்துறை அமைச்சராக இருந்த அண்ணன் ஐ.பெரியசாமியும் தொடர்ந்து எங்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். அதோடு கடந்த 10 வருடங்களாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும், எங்கள் சுயஉதவிக்குழு கூட்டமைப்பு வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளார். தற்போது தமிழகக் கூட்டுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்று ஆத்தூர் தொகுதி மக்களின் பாதுகாவலர் அண்ணன் ஐ.பெரியசாமி சுய உதவிக்குழு பெண்களின் வாழ்வாதாரம் உயர தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடனுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார். இது தமிழகத்தில் உள்ள அனைத்து சுய உதவிக்குழு பெண்களின் வாழ்வாதாரம் உயர உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.

இந்த சுய உதவிக்குழு கூட்டமைப்புக்கு மாவட்ட ஆட்சியர் விசாகன், மகளிர் திட்ட இயக்குனர் சுரேஷ், ஒன்றியப் பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன், திமுக ஒன்றியச் செயலாளர் முருகேசன், என்.பஞ்சம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பாப்பாத்தி நாகராஜ், துணைத்தலைவர் ஜோசப், ஊராட்சி மன்றச் செயலாளர் சேசுராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் உறுதுணையாக திகழ்ந்து வருகிறார்கள். இப்படி இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி காணொளிக் காட்சி மூலம் பாராட்டியதைக் கேள்விப்பட்ட கூட்டறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு சுய உதவிக் குழுவுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.