தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை நேற்று மதுரையில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் மாணவ, மாணவிளுக்கு காலை உணவு வழங்கும் பணி தொடக்க விழா திண்டுக்கல் சௌராஷ்டிராபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு உணவுகள் வழங்கி, அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்கள். இவர்களுடன் வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி, மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா ஆகியோரும் உணவு அருந்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, “தமிழக முதல்வர், தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவற்றை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக கல்விக்கும் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறார். குழந்தைகள் நலனிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இன்றைய குழந்தைகள்தான் நாளைய எதிர்கால சமுதாயம் என்பதை அறிந்து, அவர்களுக்கு கல்வி அளிக்கவும், பசியின்றி கல்வி கற்கவும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
குடும்ப சூழ்நிலை காரணமாக பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு வரும்போது காலை உணவு சாப்பிடாமல் வருகின்றனர் என்பதை அறிந்து, அவர்களின் வயிற்றுப் பசியை நீக்க இத்திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர், சத்துணவுத்திட்டத்தில் முட்டை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார். அந்த வகையில் தற்போது தமிழ்நாடு முதலமைச்சர், காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
அரசியல், பொருளாதாரம், கல்வி, தொழில் முன்னேற்றம் ஆகியவைதான் திராவிட மாடல் ஆட்சி என்பதை முதல்வர் பிரகடனப்படுத்தி வருகிறார். இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் விளங்கும். மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். அவருக்கு நாம் உறுதுணையாக இருப்போம்” என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சிகள் நிர்வாக இயக்குநரகம் துணை இயக்குநர் கோபால கிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சசிக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் தண்டபாணி, ஒன்றியச் செயலாளர் நெடுஞ்செழியன், கிழக்குப் பகுதி செயலாளர் ராஜேந்திரகுமார், மாநகராட்சி மண்டல குழுத்தலைவர் பிலால் உசேன், மண்டலக்குழு தலைவர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.