
டெல்லியில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வாடிக்கையான ஒன்று. அந்தந்த மாநிலங்களின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் அந்த அலங்கார ஊர்திகள் அமைந்திருக்கும். அந்தவகையில் இந்தாண்டுக்கான தமிழக அரசின் சார்பாக அலங்கார ஊர்தியை உருவாக்கியிருந்தது. ஆனால், மத்திய அரசு சில ஆச்சரியமான காரணங்களை கூறி நிராகரித்திருக்கிறது. தென் மாநிலங்களில் கர்நாடகாவைத் தவிர மற்ற அனைத்து மாநில அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், மேற்குவங்க மாநிலத்தின் அலங்கார ஊர்தியும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். மத்திய அரசு தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், தமிழக வாகனத்தை குடியரசு தின விழாவில் கண்டிப்பாக அனுமதிக்க இயலாது என்று மத்திய அரசு தற்போது தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் என்ன காரணத்துக்காக அனுமதி வழங்க இயலாது என்று தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.