Tamil Nadu Teachers Union demands change of school hours

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளியின் நேரத்தில் மாற்ற வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் இளமாறன் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Advertisment

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த காலங்களை காட்டிலும் வெயிலின் உக்கிரம் இந்த வருடம் ஆரம்பத்திலேயே கூடுதலாக உள்ளது. நாடு முழுதும் சுட்டெரிக்கும் வெயிலை கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன்கருதி பள்ளிகள் இயங்கும் நேரம் சில மாநிலங்களில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவில் பள்ளி நேரம் என்பது காலை 8 மணிக்கு தொடங்கி 11 மணிக்குள் நிறைவடைந்து விடுகிறது. அதேபோல கர்நாடகத்தில் தேர்வு வைத்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இப்போதே வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது.

Advertisment

எதிர்வரும் காலங்களில் வெயில் உச்சத்தைத் தொடும். வெயிலின் தாக்கத்தினால் பல்வேறு சரும நோய்கள், காய்ச்சலால் குழந்தைகளுக்கு சகஜத்தன்மை மாறுகின்றது. உடலும் உள்ளமும் ஒருசேர ஒழுங்காக இருந்தால் மட்டுமே கற்றலும் கற்பித்தலும் சிறப்பாக நடக்கும். வெயிலின் கோரதாண்டவத்தை சமாளிக்கும் வகையில் மே மாதம் தேர்வு முடியும் வரை பள்ளி நேரத்தை காலை 7.30 லிருந்து 12.30 வரை மாற்றியமைத்து மாணவர்களை பேணும்படி முதலமைச்சரை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.