Tamil Nadu Rural Development Officers Association demands government fund

Advertisment

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில், ‘தமிழக அரசு நிதி வழங்கவில்லை’ என கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அச்சங்கத்தின் வட்டார தலைவர் ராஜ்மோகன் தலைமை வகித்தார். செயலாளர் பார்த்திபநாதன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் லாரன்ஸ், “பாக்கெட்டில் பத்து பைசா இல்லை, அலுவலகத்தில் பேப்பர் கேட்டு வாங்கக்கூட காசு இல்லை. ஒப்பந்த பணியாளர்களுக்கு சம்பளம் போட்டு இரண்டு மாதம் ஆகப்போகிறது.

Advertisment

அரசு, ஒதுக்க வேண்டிய நிதியை இன்னும் ஒதுக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. கிராம ஊராட்சிகளில் நிதி இல்லாமல் எந்த வேலையும் நடக்கவில்லை. தமிழக அரசு, நிதி ஒதுக்காததால் ஆரம்பத்தில் ஊராட்சி தலைவர்கள்தான் பாதிக்கப்பட்டனர். தற்போது ஒன்றிய அலுவலக ஊழியர்கள் பாதிக்கப்பட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளோம். நிர்மலா சீதாராமன் ரூ.900 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக பேப்பரில் மட்டும்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், நிதி நமக்கு வந்தபாடில்லை. எல்லாவற்றுக்கும் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலைதான் உள்ளது. பைப் கடைக்காரர் நம்மளை பார்த்தாலே கடை அடைத்து விட்டு ஓடி விடுகிறார். அந்த அளவுக்கு நிதி நெருக்கடியில் உள்ளோம். இன்னும் ஓரிரு நாளில் அரசு நிதி வழங்காவிட்டால் இங்கு யாரும் தீபாவளி கொண்டாட முடியாது” என பேசினார். இந்தப் போராட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.