ADVERTISEMENT

தமிழக பதிவுத்துறை வசூலில் சாதனை!

09:43 PM Dec 15, 2023 | prabukumar@nak…

அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் சுபமுகூர்த்த தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் சுபமுகூர்த்த தினமான நேற்று (14.12.2023) அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என எதிர்பார்க்கப்பட்டது.

ADVERTISEMENT

இதனால் நேற்றைய தினம் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் வழங்கப்பட வேண்டும் என பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு இருந்தது. அதனடிப்படையில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் (token - டோக்கன்), இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் வழங்கப்பட்டன. மேலும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக நான்கு தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் எனப் பதிவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ADVERTISEMENT

இதன் அடிப்படையில் நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் ஆவணப் பதிவுகள் நடைபெற்றன. இந்நிலையில் தமிழக பதிவுத்துறை வசூலில் புதிய சாதனை படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பதிவுத்துறையில் சார் பதிவகங்களில் நேற்று (14.12.2023) ஆவணங்களின் பதிவு அதிகமாக எதிர்பார்க்கப்பட்டதால் கூடுதலான டோக்கன்கள் வழங்கப்பட்டன. இதன் மூலமாகப் பதிவு செய்யப்பட்ட 22,060 ஆவணங்களின் மூலம் அரசுக்கு வருவாயாக ரூபாய் 192 கோடி வரப்பெற்றுள்ளது. இந்த நிதியாண்டில் பதிவுத்துறையில் ஒரே நாளில் இதுவரை வரப்பெற்ற வருவாயில் நேற்றைய தினம் பெறப்பட்ட வருவாயே மிக அதிகமானதாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT