Advertisment

தமிழகத்திற்கான 5 தொடர்வண்டிப் பாதை திட்டங்களை அரசு ரத்து செய்யக்கூடாது! அன்புமணி 

தமிழகத்திற்கான 5 தொடர்வண்டிப் பாதை திட்டங்களை அரசு ரத்து செய்யக்கூடாது என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து மாமல்லபுரம் வழியாக கடலூர் வரை தொடர்வண்டிப் பாதை அமைக்கும் திட்டம் உள்ளிட்ட 5 தொடர்வண்டிப் பாதை திட்டங்களை கைவிடும்படி தெற்கு தொடர்வண்டித் துறைக்கு இந்திய தொடர்வண்டி வாரியம் ஆணையிட்டிருக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொடர்வண்டி திட்டங்கள் கைவிடப்படுவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

Advertisment

Anbumani Ramadoss

தெற்கு தொடர்வண்டித் துறைக்கு தொடர்வண்டி வாரியம் எழுதியுள்ள கடிதத்தில் சென்னை- மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலூர், சென்னை ஆவடி- கூடுவாஞ்சேரி, திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை, ஈரோடு - பழனி, அத்திப்பட்டு - புத்தூர் ஆகிய 5 திட்டங்களால் பொருளாதார பயன்கள் கிடைக்காது என்பது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும், அதனால் இந்த திட்டங்களுக்காக இனி ஒரு பைசா கூட செலவழிக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக இத்திட்டங்கள் அனைத்தும் கைவிடப்படும். இதேபோல், தெற்கு தொடர்வண்டித்துறை மூலம் கேரளத்தில் செயல்படுத்தப் பட வேண்டிய 5 திட்டங்களையும் கைவிடும்படி இந்திய தொடர்வண்டி வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இந்திய தொடர்வண்டி வாரியம் கைவிடும்படி அறிவுறுத்தியுள்ள 5 திட்டங்களுமே பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அரங்க. வேலு தொடர்வண்டித்துறை இணை அமைச்சராக இருந்த போது தமிழகத்தின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஆகும். 2008-09 ஆண்டுக்கான தொடர்வண்டி நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டத்தின்படி சென்னை பெருங்குடியிலிருந்து மாமல்லபுரம், புதுச்சேரி, கடலூர் வரை 178 கிலோமீட்டர் தொலைவுக்கு தொடர்வண்டிப் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அத்திட்டத்திற்காக ரூ.523 கோடி ஒதுக்கவும் ஒப்புதல் அளிக்கப் பட்டது. சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு இணையாக தொடர்வண்டிப் பாதை அமைக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் தான் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது.

கிழக்குக் கடற்கரை தொடர்வண்டிப்பாதை திட்டத்திற்காக சென்னையிலிருந்து கடலூர் வரை புதிய பாதை அமைக்கப்படும் பட்சத்தில், கடலூர் முதல் காரைக்குடி வரை இப்போதுள்ள பாதையை மேம்படுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், காரைக்குடியிலிருந்து இராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரிக்கு 463 கிமீ புதிய பாதை அமைக்கலாம் என்றும் அப்போது முடிவு செய்யப்பட்டு ஆய்வுகளும் நடத்தப்பட்டன. இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு 2009-ஆம் ஆண்டில் அமைந்த புதிய அரசில் பா.ம.க. பங்கேற்காத நிலையில், தமிழகத்திலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அழுத்தம் கொடுக்காததால் இந்தத் திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. அதனால், காரைக்குடி-கன்னியாகுமரி புதியபாதை திட்டத்தை முதலில் கைவிட்ட தொடர்வண்டி வாரியம், இப்போது அடுத்தக்கட்டமாக சென்னை- மாமல்லபுரம் - கடலூர் திட்டத்தையும் கைவிட்டிருக்கிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நடைபெறுவதால் மாமல்லபுரம் உலகப்புகழ் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, சென்னை முதல் புதுச்சேரி வரையிலான கிழக்குக் கடற்கரைச் சாலையை பொழுதுபோக்கு சாலையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மற்றொருபுறம் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் தொடர்வண்டிகளில் கடுமையான நெரிசல் நிலவுகிறது. இத்தகைய சூழலில் கிழக்குக் கடற்கடை தொடர்வண்டிப் பாதை அமைக்கப்பட்டால் அது சுற்றுலா வளர்ச்சிக்கும், தென் மாவட்டங்களுக்கும் கூடுதல் தொடர்வண்டிகளை இயக்குவதற்கும் பெரும் உதவியாக இருக்கும்.

ஆவடி - கூடுவாஞ்சேரி இடையிலான பாதை திருப்பெரும்புதூர், ஓரகடம், அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களை கொண்டு செல்லவும், உற்பத்தி செய்யப் பட்ட பொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்லவும் உதவும். அதேபோல், அத்திப்பட்டு - புத்தூர் தொடர்வண்டிப் பாதை அமைக்கப்படும் பட்சத்தில் சென்னை- திருவள்ளூர் வழித்தடத்தில் நெரிசல் குறைவதுடன், எண்ணூர் துறைமுகத்துக்கு சரக்குகளை கொண்டு செல்வதற்கும் பயனுள்ளதாக அமையும்.

திண்டிவனம் - திருவண்ணாமலை பாதையும், ஈரோடு - பழனி பாதையும் ஆன்மிகப் பயணிகளுக்கு வசதியாக இருக்கும். அந்தப் பகுதிகளின் தொழில் வளர்ச்சிக்கும் இந்தத் திட்டங்கள் வழிவகுக்கும். எனவே, தமிழகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கக் கூடிய இந்த 5 தொடர்வண்டித் திட்டங்களையும் ரத்து செய்யும் முடிவை தொடர்வண்டி வாரியம் கைவிட வேண்டும். மாறாக, மாநில அரசுடன் இணைந்து இந்த 5 திட்டங்களையும் விரைந்து செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

anbumani ramadoss line railway Tamil Nadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe