
கரோனா பரிசோதனை முடிவுகளை விரைவாக தெரிவிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம், கரோனா சிகிச்சை மற்றும் தடுப்பூசிகள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரித்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கரோனா பரவல் தொடர்பான இந்த வழக்கில் இன்று மத்திய அரசு விளக்கம் அளித்தபோது, 'கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில்தான் மருந்துகள் ஒதுக்கீடு செய்வதும், தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்வதும் பாகுபாடின்றி நடைபெற்று வருகிறது' என தெரிவித்தது. அப்போது தமிழக அரசு சார்பில், 'கடந்த இரண்டு வாரங்களைவிட தற்போது கரோனா பரவல் சமாளிக்கக் கூடிய வகையில் இருப்பதாகவும், அதே நேரத்தில் படுக்கைகளை அதிகரிக்க மற்றும் விரைவில் பரிசோதனை முடிவுகளை வெளியிடுவது தொடர்பாகவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும்' தெரிவித்தது. மேலும், 'இன்று 18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்வர் தொடங்கி வைத்துள்ளதாகவும், சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சைகள் தொடங்கப்பட்டுள்ளது' என தமிழக அரசு பதில் அளித்தது.
அரசின் பதில்களை கேட்டுக்கொண்ட நீதிமன்றம், 'முடிவுகளை விரைந்து தெரிவிப்பதால் கரோனா பரவலை விரைந்து கட்டுப்படுத்த முடியும். புதுச்சேரி உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் சம அளவில் தடுப்பூசிகளை ஒதுக்கவேண்டும்' என்றது. மருந்து தடுப்பூசி ஒதுக்கீடு பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்ததோடு, இரண்டாவது அலை குறைந்தாலும் எதிர்காலம் கருதி தமிழகம், புதுச்சேரி கவனமாக இருக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.