உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்று வாகை சூடியுள்ளார்.
சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனாக உள்ள சீன வீரர் டிங் லீரெனை எதிர்த்து இந்திய செஸ் வீரர் குகேஷ் விளையாடினார். பரபரப்பான 14 சுற்று ஆட்டத்தில் டிங் லீரெனை வீழ்த்தி குகேஷ் அபாரமாக வெற்றி பெற்றுள்ளார்.
58 வது நகர்த்திலில் வெற்றிவாகை சூடியுள்ளார் குகேஷ்(18). இதனால் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன் பட்டத்தை பெற்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முன்னாள் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் குகேஷின் வெற்றிக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 'உலக செஸ் சாம்பியன்ஷிப்பை குகேஷ் மகிழ்ச்சி அளிக்கிறது. 15 நிமிடங்களுக்கு முன் கூட போட்டியில் வெல்வாரா என சந்தேகம் இருந்தது. ஆனால் இறுதியில் அவர் வென்றது மகிழ்ச்சி அளித்துள்ளது' என தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழக முதல்வர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், '18 வயதில் மிக இளைய உலக செஸ் சாம்பியன் ஆகியுள்ள குகஷுக்கு வாழ்த்துக்கள். உங்களது குறிப்பிடத்தக்க இந்த சாதனை இந்தியாவின் செஸ் பாரம்பரியத்தைத் தொடர்வதோடு, மற்றொரு உலகத் தரம் வாய்ந்த சாம்பியனை உருவாக்குவதன் மூலம் சென்னை உலக செஸ் தலைநகராக அதன் இடத்தை மீண்டும் உறுதிப்படுத்த உதவியுள்ளது. உன்னை நினைத்து தமிழகம் பெருமை கொள்கிறது!' என பதிவிட்டுள்ளார்.