ADVERTISEMENT

“தமிழ்நாடு மின் உற்பத்தி 43%ல் இருந்து 70% ஆக உயர்த்தப்பட்டுள்ளது..” - அமைச்சர் செந்தில்பாலாஜி

11:38 AM Oct 11, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அண்மையாக நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு குறித்து தகவல்கள் வெளியாகிவருகின்றன. இது தொடர்பாக அண்மையில் தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், நாடு முழுவதும் அனல்மின் நிலையம் உள்ளிட்ட தேவைகளுக்கான நிலக்கரி தட்டுப்பாடு அதிகரித்துவருவதால் சிமெண்ட் தயாரிப்பிற்காக நிலக்கரியை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. இதனால் சிமெண்ட் (50 கிலோ மூட்டை) உற்பத்தி விலை 60 ரூபாய் அதிகரிக்கக் கூடும் என அறிக்கை வாயிலாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று (10.10.2021) திருச்சி விமான நிலையத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் டன் நிலக்கரி தமிழகத்திற்குத் தேவைப்படுகிறது. தற்போது கையிருப்பில் இருக்கக்கூடிய நிலக்கரியை மாநிலங்களின் தேவைக்கேற்ப ஒன்றிய அரசு பிரித்து வழங்குகிறது. தொடர்ந்து தினமும் 60 ஆயிரம் டன் நிலக்கரி எடுத்துவருகிறோம். தமிழ்நாட்டில் மின் உற்பத்தி 43 விழுக்காட்டிலிருந்து 70 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மின் தேவை 16 ஆயிரம் மெகாவாட். இதில் தேவைக்கும், உற்பத்திக்கும் 2,500 மெகாவாட் இடைவெளி உள்ளது. இதனால் 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்கான சூரிய மின்சக்தி பூங்காக்களை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இன்றுவரை 204 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 12 துணை மின் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மழைக்காலம் என்பதால் சேதமடையும் மின்கம்பங்களைப் புதுப்பிக்க ஒரு லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. தமிழக மின் வாரியம் வாங்கிய கடனுக்கு 16,000 கோடி ரூபாய் வட்டி கட்டிவருகிறது. எந்த நிலையிலும் விவசாயத்திற்கான இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். தமிழ்நாட்டில் ஒரு நொடி கூட மின்வெட்டு இருக்காது” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT