
தீவிரவாதத்தை தடுக்க மாநில அளவில் புதிய பிரிவை ஏற்படுத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை மட்டுமே விசாரணை நடத்தும் சூழல் இருந்து வருகிறது. இந்நிலையில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை விசாரிக்க மாநில அளவிலேயே புதிய பிரிவை உருவாக்கி தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் ஒரு டி.ஐ.ஜி, 4 எஸ்.பி.க்கள், 5 ஏ.எஸ்.பி.க்கள், 13 டி.எஸ்.பி.க்கள், 31 ஆய்வாளர்கள், 61 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என 383 பேர் இந்தப் பிரிவின் கீழ் செயல்படுவார்கள் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுண்ணறிவு பிரிவு ஏ.டி.ஜி.பிக்கு கீழ் இந்தப் பிரிவு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை சிறப்பு பிரிவு மட்டுமே விசாரிக்கும் சூழலில் தீவிரவாதத்தை தடுக்க மாநில அளவில் புதிய பிரிவு ஏற்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.