பல்வேறு அரசியல் காரணங்களுக்காக பணி நீக்கம் செய்யப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்குப் பணி நியமனம் வழங்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும், பணி நியமனத்திற்கு எதிரான உச்சநீதமன்ற வழக்கை திரும்பப் பெறக் கோரியும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மக்கள் நலப் பணியாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது, தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.இதை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலத் தலைவர் செல்லபாண்டியன், “அரசியல் காரணங்களுக்காக பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களின் பணி நியமனத்திற்காக கடந்த 10 ஆண்டுகளாக காத்திருக்கிறோம். அரசு எங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.