ADVERTISEMENT

அமித்ஷாவுடன் தமிழக எம்.பி.க்கள் சந்திப்பு! நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்குமா?

08:13 AM Jan 18, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT


தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, சட்டமன்றத்தில் நிறைவேற்றிய சட்ட மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைத்தது. அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்காமல் கால தாமதம் செய்து வருகிறார் கவர்னர் ஆர்.என்.ரவி! இதனையடுத்து அனைத்து கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி விவாதித்தார் முதல்வர் ஸ்டாலின். காலதாமதம் செய்யும் கவர்னரின் செயல்களுக்கு வருத்தம் தெரிவிக்கும் தொனியில் மென்மையான வகையில் ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதேபோல, தமிழக எம்.பி.க்களை ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்காமல் தவிர்த்து வருவது குறித்த தனது ஆதங்கத்தையும் கூட்டத்தில் வெளிப்படுத்தினார் ஸ்டாலின்.

ADVERTISEMENT


இந்த நிலையில், திமுக எம்.பி. டி.ஆர் பாலு தலைமையிலான தமிழக எம்.பிக்கள் குழுவினரை 17ந் தேதி சந்திக்க நேரம் ஒதுக்கினார் அமைச்சர் அமித்ஷா. அதன்படி இந்த சந்திப்பு நேற்று (17.01.2022 ) டெல்லியில் நடந்தது. இந்த சந்திப்பின் போது, நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவினை அமித்ஷாவிடம் கொடுத்தார் டி.ஆர்.பாலு. மேலும், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து ஏன் விலக்களிக்கப்பட வேண்டும் என்பது பற்றி டி.ஆர்.பாலு, வைகோ உள்ளிட்ட எம்.பி.க்கள் விரிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அமித்ஷா, " உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தில் மாநில அரசுகளுக்கு எப்படி விலக்களிக்க முடியும்? சட்டம் என்பது பொதுவானதுதானே?" என்கிற ரீதியில் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு, தமிழகத்திற்கு ஏற்கனவே விலக்களிக்கப்பட்டிருக்கிற சம்பவங்களை விளக்கியிருக்கிறார் டி.ஆர்.பாலு.


இது தவிர, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காமல், தனது பரிசீலனையில் இருப்பதாக தமிழக அரசுக்கு கவர்னர் பதில் சொல்லிக்கொண்டே இருப்பது வருத்தமளிப்பதாகவும் எம்.பி.க்கள் குழு வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், நீட் தேர்வில் விலக்களிக்க முடியுமா? என்று மத்திய சுகாதார துறை அமைச்சரிடமும், கல்வி அமைச்சரிடமும் விவாதித்து விட்டு சொல்கிறேன் என்று தமிழக எம்.பி.க்களுக்கு பதில் சொல்லி அனுப்பி வைத்துள்ளார் அமித்ஷா! கரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அமலில் இருக்கிறது. 12 ஆம் வகுப்பிற்கான காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடக்கவில்லை. ஜனவரியில் நடக்கவிருந்த திருப்புதல் தேர்வினையும் தள்ளி வைத்திருக்கிறது தமிழக அரசு. ஜனவரி 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், 12 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா? என்ற கேள்வியை எதிரொலிக்கிறது.


நடப்பு கல்வியாண்டில் பொது தேர்வினை எழுத வேண்டிய 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்காக அரசு தேர்வுகள் எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை. இந்த சூழலில் பொது தேர்வு நடக்குமா? நடக்காதா? நடக்கவில்லை எனில் மதிப்பெண்கள் எப்படி, எதை வைத்து கணக்கிடுவார்கள் என்கிற பதடமும், அச்சமும் இப்போதே மாணவ-மாணவிகளிடம் சூழ்ந்திருக்கிறது. இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் நீட் தேர்வு மட்டும் நடந்தால், மாணவ-மாணவிகள் எப்படி அதனை எதிர்கொள்வார்கள் ? என்ற கேள்வியை பெற்றோர்கள் எழுப்புகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் நீட் தேர்வுக்கு விலக்களிக்கப்படாவிட்டால் தமிழகத்தில் ஜீரணிக்க முடியாத சம்பவங்கள் தவிர்க்க முடியாததாகி விடும் என்று கவலை தெரிவிக்கிறார்கள் கல்வியாளர்கள்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT