Gas leak incident in Ennore; Tamil Nadu Governor RN Ravi is worried

சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலையில் இருந்து நேற்று நள்ளிரவு 12 மணியளவில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியான சின்னகுப்பம், பெரியகுப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் ஆகிய பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் பலருக்கும் மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து, வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இதனை தொடர்ந்து, வாயுக்கசிவால் பெரியகுப்பம் பகுதியில் வசித்து வந்த மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறினர். மேலும், கப்பல்களில் இருந்து திரவ அமோனியா கொண்டு வரும் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், சேதம் அடைந்த குழாய் சரி செய்யப்பட்டுள்ளதாகவும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் தரப்பில் கூறப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இதனிடையே, வாயுக்கசிவு ஏற்பட்ட தனியார் தொழிற்சாலையை தற்காலிமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளிட்டுள்ள அறிவிப்பில், ‘எண்ணூரில் அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்ட கோரமண்டல் உர தொழிற்சாலையை தற்காலிமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஆய்வுக்குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், வாயுக்கசிவு விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது அலுவலக் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “வடசென்னை, எண்ணூரில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான வாயுக்கசிவு சம்பவம்மிகுந்த கவலை அளிக்கிறது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment