Tamil Nadu Governor RN Ravi says Vijayakanth's immense contribution will be remembered

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisment

இந்த செய்தியறிந்து தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர். மேலும், விஜயகாந்தின் உடலை மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு குவிந்திருந்த பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலக பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, விஜயகாந்திடன் உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

Advertisment

இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மறைந்த விஜயகாந்த்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சிறந்த நடிகரும், அர்ப்பணிப்புமிக்கதலைவரும், சிறந்த மனிதநேயவாதியுமான விஜயகாந்தின் மறைவு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. சினிமா, அரசியல், சமூக சேவை ஆகியவற்றில் அவர் வழங்கிய அளப்பரியபங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். எனது பிரார்த்தனைகள் அவரது குடும்பத்தினருடனும், எண்ணற்ற ஆதரவாளர்களுடனும் உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.