Skip to main content

கடலூரில் தமிழக அரசின் உறுதிமொழிக்குழு ஆய்வு

Published on 21/05/2025 | Edited on 21/05/2025
Tamil Nadu government's pledge committee inspects Cuddalore

கடலூர் மாவட்டம் காவலர் குடியிருப்பு சிப்காட் பகுதியில் உள்ள டாட்டா கெமிக்கல் நிறுவனம், விருத்தாசலம் அரசு மருத்துவமனை, சிப்காட் லாயல் பேப்ரிக்ஸ் நிறுவனம், காடம்புலியூர் பழங்குடியினர் சமுதாய நலக்கூடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மே 21 ஆம் தேதி தமிழக அரசின் உறுதிமொழி தலைவர் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் முன்னிலையில் உறுதிமொழி குழு  உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களுமான சோழிங்கநல்லூர் அரவிந்த் ரமேஷ், சேலம் மேற்கு அருள், வானூர் தொகுதி சக்கரபாணி, மதுரை மேற்கு பூமிநாதன், காரைக்குடி தொகுதி மாங்குடி, அண்ணா நகர் மோகன், பெருந்துறை ஜெயக்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த 2024-25 ஆம் ஆண்டுக்கான அரசு உறுதிமொழி குழுவால் கடலூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள நிறைவேற்றப்பட்ட பணிகள் மற்றும் பணிகள் நடைபெறுவதை குறித்து பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு காவலர் குடியிருப்பு கழகம் சார்பில் 49 கோடியில் 24 உதவி ஆய்வாளர் மற்றும் 155 காவலர்களுக்கான குடியிருப்பானது கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் 60 சதவீதத்திற்கும் மேல் முடிவுற்ற நிலையில் பணிகளை துரிதப்படுத்தி விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டது.

சிப்காட் தொழில் வளாகத்தில் ராயல் சூப்பர் பேப்ரிக்ஸ் நிறுவனமானது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து நாளொன்றுக்கு 618 கே ஐ டி தொழிற்சாலை கழிவுநீரை செப்டிக் டேங்க் மற்றும் சோக்பிட் மூலம் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வந்தது. நிறுவனத்தில் கடந்த 15-ஆம் தேதி சாய கழிவுநீர் தொட்டி உடைந்து தொழிற்சாலை கழிவு நீரானது வெளியேறி அருகில் இருந்த வீடுகளில் உட்புகுந்து 50-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பட்டனர்.  தற்போது இந்நிறுவனம் இயக்கத்தில் இல்லை.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சிப்காட் திட்ட அலுவலர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர் கொண்ட குழு அமைத்து விபத்து குறித்தும் தற்போது சிப்காட் பகுதியில் உள்ள நிறுவனத்தின் பாதுகாப்பு தன்மை குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டு இக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்படும் அறிக்கையினை அரசிற்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் சிப்காட் வளாகத்தில் 55 தொழில் நிறுவனங்களில் 45 நிறுவனங்கள் கெமிக்கல் சார்ந்த தொழில் நிறுவனங்களாக உள்ளது.  இங்கு காற்று மற்றும் நீர் மாசுபாடு உள்ளது என தொடர்ந்து ஆய்வாளர்கள் கூறி வருகிறார்கள்.  அதை சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.  அதே நேரத்தில் விபத்துக்குள்ளான நிறுவனத்தில் சரியான முறையில் ஆய்வு மேற்கொள்ளாத சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க இந்த உறுதிமொழி குழு பரிந்துரை செய்கிறது'' என்று கூறினார்.

இவர்களுடன் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன், காட்டுமன்னார்கோயில் சிந்தனைச்செல்வன், விருத்தாச்சலம் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்