M. H. Jawahirullah

Advertisment

மத்தியில் உள்ள மோடி அரசும், மாநிலத்தில் உள்ள எடப்பாடி அரசும் இணைந்து சேலம் முதல் சென்னை வரை எட்டு வழிச் சாலை அமைக்கும் திட்டத்தை முன்னெடுத்தன. இதற்குத் தமிழக விவசாயிகள், விவசாய அமைப்புகள், அரசியல் கட்சிகள் எனப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். வழக்கும் தொடரப்பட்டது. உச்சநீதிமன்றம் வரை சென்ற இவ்வழக்கில், திட்டத்திற்குத் தடை விதிக்க மறுத்ததுடன், சாதகமான தீர்ப்பை நேற்று வழங்கியது உச்சநீதிமன்றம். இந்தத் தீர்ப்பு பல்வேறு தரப்பிலும், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா, "விவசாய நிலங்களை அபகரித்து சென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றலாம் எனவும், சென்னை உயர்நீதிமன்றம் இந்தத் திட்டத்திற்கு விதித்தத் தடை செல்லாது எனவும், இதனை மத்திய அரசு செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளதும் அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுமேயானால் பத்தாயிரத்துக்கும் அதிகமான விவசாயக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியாகும் என்பதால் மனிதநேய மக்கள் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் இந்தத் திட்டத்திற்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

Advertisment

உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில், “முதல் கட்டமாகச் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும். சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் நிலத்தைக் கையகப்படுத்தியது தவறு. அரசு கையகப்படுத்திய நிலத்தை விவசாயிகளிடம் வருவாய்த்துறை வழிகாட்டுதல்களுடன் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்கிற உயர்நீதிமன்ற உத்தரவு செல்லும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள உத்தரவின்படி இந்த திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உடனே உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்தத்திட்டத்தால் நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்கும் விவசாயிகளையும் விவசாய நிலங்களையும் காக்க, இந்தத் திட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்று வலியுறுத்தியுள்ளார்.