Skip to main content

காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்த தமிழக அரசு உத்தரவு

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

Tamil Nadu government orders to conduct flu testing camps

 

தமிழகம் முழுவதும் தினமும் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

 

தமிழகம் முழுவதும் தினமும் 1000 காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்த தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை காய்ச்சல் பரிசோதனை முகாம்களைத் தொடர்ந்து நடத்த தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் மற்றும் டெங்கு பரவலை அடுத்து தமிழகத்தில் உள்ள கிராமங்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் முகாம்களை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்த வேண்டும் எனப் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பாதித்தவர்கள் யாரேனும் உள்ளார்களா என்று கண்டறியவும் பொது சுகாதாரத்துறை மருத்துவத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. கொசு புழு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து கொசு ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு குழுவும் குறைந்தது 2 முதல் 3 பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரையில் ‘தமிழ்க் கவிஞர் நாள்’ கொண்டாட்டம் - தமிழக அரசு தகவல்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Tamil Poet's Day' Celebration in Madurai - Tamil Nadu Government Information!

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்ப்பில் பாவேந்தர் பாரதிதாசனின் 133 ஆம் பிறந்தநாள் நிகழ்வு தமிழ்க் கவிஞர் நாளாக நாளை (29.04.2024) காலை 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் வழங்கும் கலை நிகழ்ச்சியோடு நிகழ்வு தொடங்குகிறது. தொடக்க விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் நோக்கவுரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்விற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமையுரை வழங்கவுள்ளார்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் 'பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தமிழ் உணர்வே! சமுதாய உயர்வே' என்ற தலைப்பில் பட்டிமன்றமும், புலவர் செந்தலை கவுதமன் தலைமையில் 'பாவேந்தர் கண்ட படைப்புக்களங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கமும் முனைவர் சந்திர புஸ்பம் இசையரங்கமும் கவிஞர் நெல்லை ஜெயந்தா  தலைமையில் 'பாவேந்தரின் பார்வைகள்' என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெறவுள்ளது. மதுரை குரு மருத்துவமனையின் மருத்துவர் ச.கு.பாலமுருகன் நிறைவுரை வழங்கவுள்ளார். இந்நிகழ்வில் தமிழறிஞர்களும் பேராசிரியர்களும் அரசுப்பணியாளர்களும் தமிழார்வலர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் பாரதிதாசன். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் புரட்சிக்கவி என்றும், பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர் ஆவார். தமிழாசிரியர், கவிஞர், திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் ஆவார். 

Next Story

‘கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்’ - போக்குவரத்துத் துறை தகவல்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Transport Department Information for Additional Special Bus Operation

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மக்கள் தொடர்பு இணை இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “இன்று வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள் (26/04/2024) என்பதாலும், நாளை சனிக்கிழமை (27/04/2024) மற்றும் நாளை மறுநாள் ஞாயிறு (28/04/2024) என வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) 280 பேருந்துகளும், நாளை (27/04/2024) 355 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதே போன்று சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) மற்றும் நாளை (27/04/2024) 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று அன்று 280 பேருந்துகளும் மற்றும் நாளை 355 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 55 பேருந்துகளும் மேற்கண்ட இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதி நாளான இன்று 9 ஆயிரத்து 276 பயணிகளும், நாளை 5 ஆயிரத்து 796 பயணிகளும் மற்றும் நாளை மறுநாள்  8 ஆயிரத்து 894 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலிமூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.