ADVERTISEMENT

தமிழ்நாடு பட்ஜெட் முத்திரைச் சின்னம் வெளியீடு; தமிழக அரசு அறிவிப்பு

04:46 PM Feb 18, 2024 | mathi23

இந்த ஆண்டுக்கான முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தில், முதல்வர் மு.க. ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில், ‘2024-2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாளை (19-02-24) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. மேலும், தமிழ்நாடு பட்ஜெட் முத்திரைச் சின்னத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘என்னருந் தமிழ்நாட்டின் கண் எல்லோரும் கல்வி கற்றுப் பன்னருங் கலை ஞானத்தால், பராக்கிரமத்தால் அன்பால், உன்னத இமயமலை போல் ஓங்கிடும் கீர்த்தி எய்தி இன்புற்றார் என்று மற்றோர் இயம்பக் கேட்டிடல் எந்நாளோ? என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஏங்கிய காலம் நிறைவேறி; இன்று தமிழ்நாடு உயர்கல்வியில் முன்னணி மாநிலம், மருத்துவத் துறையில் முன்னணி மாநிலம், தொழில்துறையில் முன்னணி மாநிலம், இந்தியப் பொருளாதாரத்தில் உயர்ந்துள்ள முன்னணி மாநிலம், வேளாண்மையில் முன்னணி மாநிலம், விளையாட்டுத் துறையில் இளைஞர்தம் ஆற்றல் நிறைந்துள்ளதில் முன்னணி மாநிலம் என எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் கண்டு எத்திசையிலும் புகழ் பதித்துத் திகழ்கின்றது. ஏடும். நாடும் இதர மாநிலங்களும் இதற்குச் சான்று பதிக்கின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்ற மே 2021 ஆம் ஆண்டில் ஆட்டிப் படைத்த கொரோனாவை முறியடித்து, காலமல்லாக் காலத்தே புயலும் மழையும் வீசி கடும் சேதங்களை விளைவித்த நிலையிலும், மக்களின் துயர் நீக்கி நமது மாநிலத்திற்கு இயல்பாக வரவேண்டிய நிதிகளும் உதவிகளும் ஒத்துழைப்பும் கிடைக்காமல் தடைகள் பல தொடர்கின்ற நிலையிலும், முறையான சிதையாத கட்டுப்பாடான நிர்வாக நடைமுறைகளால் தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேற்றத் திசையினில் தமிழ்நாட்டினை செலுத்திடும் நோக்கில் இந்த திராவிட மாடல் அரசு ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற இலக்கினை எளிதில் எய்திடும் வண்ணம் இன்று நான்காம் ஆண்டில் நிதிநிலை அறிக்கையைப் பேரவையில் அளிப்பதில் பெருமிதம் கொள்கிறது.

தமிழ்நாடு அரசின் 2024-25 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை ‘தடைகளைத் தாண்டி’ எனும் தலைப்பில் பேரவையில் பெருமிதத்துடன் அளிக்கப்படுவதைக் குறிக்கும் சின்னமாக நிதிநிலை அறிக்கையின் முத்திரைச் சின்னம் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ எனும் பழமொழிக்கேற்ப வரும் ஆண்டின் நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முன்னே முழங்கிடும் முத்துச் சின்னமாக இது விளங்கிடும் என்பது திண்ணம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT