Advertisment

“போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகள்” - தமிழக அரசு தகவல்!

Tamil Nadu government information Relief aid  

Advertisment

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் மற்றும் பெரு மழையால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகள் மற்றும் மறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “விழுப்புரம் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு 67 நிவாரண முகாம்களில் 4906 நபர்கள்(ஆண்கள் 2070, பெண்கள் 2239, குழந்தைகள் 597) தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களில் தங்கி இருந்த பொதுமக்களுக்காக 16 ஆயிரத்து 616 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 35 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டது. 19ஆயிரத்து 654 பொதுமக்கள் பாதுகாப்பாகத் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவர்களுக்கு 68 ஆயிரத்து 350 உணவுப் பொட்டலங்கள் வாங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 16 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட 612 குடும்பங்கள் (ஆண்கள் 831 பெண்கள் 943 குழந்தைகள் 206) மேற்படி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 3809 உணவு பொட்டலங்கள், குடிநீர் மற்றும் தேவையான அத்தியாவசிய பொருட்கள் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலமும், வழங்கப்பட்டுள்ளது. அதோடு ஆவின் நிறுவனம் மூலம் 6220 பால் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். அதோடு வெள்ள நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட அமைச்சர்களையும் கண்காணிப்பு அலுவலர்களையும் துரிதமாக வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். மேலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி பணிகளை துரிதப்படுத்தினார்.

Tamil Nadu government information Relief aid  

மேலும் புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 5 இலட்சம் ரூபாய் வழங்கிடவும்; அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிடவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

relief
இதையும் படியுங்கள்
Subscribe