
'ஆன்லைன் விளையாட்டைத்தடை செய்யச் சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத்தடைச் சட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துதல் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டுகளை நடத்துகின்ற கூட்டமைப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. ஏற்கனவே இந்த வழக்கில் விசாரணை நடந்து வந்தநிலையில், இரண்டாவது நாளாக இன்று விசாரணை நடைபெற்று வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
அப்பொழுது ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், 'சிலர் ஆன்லைன் விளையாட்டுகளில் மரணம் அடைகிறார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த விளையாட்டுகளைக் குறை கூற முடியாது.அதே போல் திறமைக்கான விளையாட்டை அதிர்ஷ்டத்திற்கான விளையாட்டு எனக்கொண்டுவர முடியாது' என்ற வாதங்களை முன் வைத்தார். மத்திய அரசு தரப்பில் வாதங்களை முன் வைக்கும் போது, ''ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த மத்திய அரசு சட்டம் கொண்டு வந்திருக்கிறது. மத்திய அரசு சட்டப்படி ஆன்லைன் சூதாட்டம் தடுக்கப்படும். ஆனால், ஆன்லைன் விளையாட்டுகளைத்தடை செய்வதற்குத்தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை' என்ற வாதத்தை வைத்தது. இதில் தமிழக அரசின் பதில் வாதத்திற்காக வழக்கானது ஆகஸ்ட் ஒன்றாம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Follow Us