ADVERTISEMENT

“தமிழக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகாவிற்கு துணை போகிறதோ...” பி.ஆர்.பாண்டியன்

09:51 AM Nov 03, 2020 | tarivazhagan

ADVERTISEMENT


மேட்டூர் அணை - சரபங்கா திட்டம் சென்னை உட்பட 25 மாவட்டங்களில் குடிநீர் ஆதாரம் பறிபோகும் காவிரி மேலாண்மை கூட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

சென்னை பெசன்ட் நகரில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக அரசு காவிரி உபரி நீர் திட்டம் என்கிற பெயரில் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணாக நடுவர் மன்ற இறுதி தீர்ப்பிற்கு எதிராக காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி பெறாமல் மேட்டூர் அணை - சரபங்கா திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சுயநலத்திற்காக நிறைவேற்ற முயற்சிக்கிறார். 2015ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கைவிடப்பட்ட திட்டத்தை செயல்படுத்த முயற்சிப்பது அவருக்கு செய்கிற துரோகம். தடை கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மூன்று மாதகாலமாக மத்திய அரசாங்கமும் காவிரி மேலாண்மை ஆணையமும் வழக்கிற்கு உரிய பதிலைத் தராமல் காலம் கடத்தி வருகிறது.


இந்த நிலையில் கடந்த வாரம் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தலைவர் ஜெயின் தலைமையில் இணையம் வழியாக நடைபெற்றது. அக்கூட்டத்தில் உயர்நீதிமன்ற வழக்கிற்கு பதிலளிக்க ஆணையத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட காவிரி சரபங்கா திட்டம் குறித்தான விளக்க கலந்துரையாடலில் பங்கேற்ற கர்நாடக அதிகாரிகள் சரபங்கா திட்டத்தை சட்டவிரோதமாக செயல்படுத்தி புதிய நீர்ப்பாசன பகுதிகளை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் தமிழக அரசு சட்டவிரோதமாக ஈடுபடுகிறது என குற்றஞ்சாட்டி இதனை கைவிட வேண்டும் எனவும், ஏற்க மறுத்தால் கர்நாடகம் மேகதாதுவில் அணை கட்டி புதிய நீர் பாசன பகுதிகளை நாங்களும் விரிவாக்கம் செய்வோம் என பேசியதால் மிகப்பெரிய அளவில் சர்ச்சை ஏற்பட்டு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

இது தொடர்பான ஆணையக் கூட்டம் குறித்து வெள்ளை அறிக்கையை ஆணைய தலைவர் வெளியிட வேண்டும். இதன் மூலம் தமிழக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகாவிற்கு துணை போகிறதோ என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே இதனை உடனடியாக கைவிட வேண்டும். திட்டம் நிறைவேற்றினால் காவிரி டெல்டாவில் 25 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் அழிவதோடு, 5 கோடி மக்களுடைய குடிநீர் ஆதாரம் பறி போகும் பேராபத்து ஏற்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து மத்திய மாநில அரசுகள் இத்திட்டத்தை கைவிட முன்வர வேண்டும்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT