Skip to main content

குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன தமிழக அரசு!

Published on 28/05/2024 | Edited on 28/05/2024
Tamil Nadu government gave good news to family card holders!

ரேஷன் கடைகளில் மே மாதத்துக்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் மக்கள் பெற்றுக்கொள்ளலாம் எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு அரசு, சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும், ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது.

இத்தகைய சூழலில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கான ஒப்பந்தப்புள்ளிகள் மீதான முடிவுகள் மேற்கொண்டு அப்பண்டங்களைக் கொள்முதல் செய்வதில் காலதாமதம் நேரிட்டது. இருப்பினும் அரசின் தொடர்ந்த சீரிய முயற்சிகள் காரணமாக நகர்வுப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு நாளது தேதியன்று (27.05.2024) 82 லட்சத்து 82 ஆயிரத்து 702 குடும்ப அட்டைதாரர்களுக்குத் தலா ஒரு கிலோ துவரம் பருப்பினையும் 75, லட்சத்து 87 ஆயிரத்து 865 குடும்ப அட்டைதாரர்களுக்குத் தலா ஒரு லிட்டர் பாமாயில் பாக்கெட்டினையும் நியாயவிலைக் கடைகளிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. 

Tamil Nadu government gave good news to family card holders!

மேலும் 24 லட்சத்து 96 ஆயிரத்து 510 கிலோ துவரம் பருப்பு மற்றும் 33 லட்சத்து 57 ஆயிரத்து 352 பாமாயில் பாக்கெட்டுகள் நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுச் செல்ல தயார் நிலையிலும் 8 லட்சத்து 11 ஆயிரம் கிலோ துவரம் பருப்பு மற்றும் 7 லட்சத்து 15 ஆயிரத்து 395 பாமாயில் பாக்கெட்டுகள் கிடங்குகளில் நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பும் பொருட்டு நாளது தேதியில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மீதம் பெற வேண்டிய துவரம்பருப்பு மற்றும் பாமாயில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து பெற்று விரைவாக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

எனவே குடும்ப அட்டை தாரர்களுக்கு மே 2024 மாத ஒதுக்கீட்டினை இம்மாத இறுதிக்குள் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் மே 2024 மாதத்தில் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள் வசதிக்காக ஜுன் மாதம் முதல் வாரம் வரை நியாயவிலைக்கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளும்படி மாவட்ட வழங்கல் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். குடும்ப அட்டைதாரர்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு மே மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்கள் அவர்களுக்கான மே மாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை ஜூன் மாதம் முதல் வாரத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலம்’ - தமிழக அரசு பெருமிதம்!

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
'Tamil Nadu is the leading state in India' - Tamil Nadu Government is proud

மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு 2023-24-ஆம் ஆண்டிற்கான நீடித்த நிலையான வளர்ச்சிக் குறியீடுகள் பற்றிய நான்காவது ஆய்வு அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது. நிதி ஆயோக் நிறுவனத்தின் 2018, 2019 மற்றும் 2020 ஆகிய மூன்றாண்டுகளின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வளர்ச்சிக் குறியீடுகளை விட, இந்த 2023-24-ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி தொலைநோக்குச் சிந்தனைகளுடன் செயல்படுத்தி வரும் சீரிய திட்டங்களால் வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இன்று இந்தியாவிலேயே முதல் இடம் பெற்றுச் சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது. காலநிலை மாற்றம் சுற்றுச்சூழல் பராமரிப்பு, குறைந்த செலவில் மாசிலா எரிசக்தி இரண்டிலும் தேசிய அளவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உயர்ந்துள்ளது. மேலும், பசிப்பிணி அகற்றல், பொருளாதாரம் மற்றும் சிறந்த வேலைவாய்ப்பு, தரமான கல்வி, மக்கள் நலம் மற்றும் சுகாதார வாழ்வு, தொழில் வளர்ச்சி வசதிகள். புத்தாக்கத் தொழில் மற்றும் உட்கட்டமைப்பு தூய்மையான குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல், சமத்துவமின்மையைக் குறைத்தல், உற்பத்தி மற்றும் நுகர்வு, அமைதியைக் காத்தல், நீதி நிர்வாகம், வலுவான நிறுவனங்கள் மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உயர்ந்து சிறந்துள்ளது. 

'Tamil Nadu is the leading state in India' - Tamil Nadu Government is proud

தமிழக அரசின் திட்டங்களான, மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வி தொடரும் மாணவிகளுக்கு மாதம் 1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம், மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்து விடியல் பயணத் திட்டம், பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், சமத்துவத்தை நிலைநாட்டும் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கேற்ற திறன்களை வழங்கும் நான் முதல்வன் திட்டம் முதலான சமூகநீதித் திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களால் குடும்பப் பொருளாதாரம் உயர்ந்து வறுமை ஒழிப்பில் கடந்த காலங்களைவிட மாபெரும் வளர்ச்சி கண்டு இந்தியாவிலேயே வறுமையை ஒழிப்பதில் தமிழ்நாடு தலைசிறந்த முதன்மை மாநிலமாக விளங்குகிறது என்பதை இந்த நிதி ஆயோக் அறிக்கை நிரூபித்துள்ளது.

அதாவது, வறுமை ஒழிப்புத் திட்டத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தலைசிறந்து விளங்குகிறது என்பது உட்பட 11 இனங்களில் தமிழ்நாடு நீடித்த நிலையான வளர்ச்சிக் குறியீடுகளில் தேசிய சராசரியைவிட அதிகமாக வளர்ச்சி பெற்று முன்னணி மாநிலமாகவும், இரண்டு இனங்களில் தேசிய சராசரிக்கு இணையாகவும் வளர்ச்சி பெற்று 13 இனங்களில் மிகவும் சிறந்துள்ளது தமிழ்நாடு என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

அமுதா ஐ.ஏ.எஸ்.க்கு கூடுதல் பொறுப்பு!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
Additional responsibility for Amutha IAS

தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் கடந்த 16 ஆம் தேதி  (16.07.2024) உத்தரவிட்டிருந்தார். இது குறித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டிருந்த உத்தரவில், ‘தமிழக உள்துறை செயலாளர் அமுதா பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழகத்தின் புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிட்கோ நிர்வாக இயக்குநராக இருந்த மதுமதி பள்ளிக்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டது.  அதோடு 10 மாவட்ட ஆட்சியர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதன்மூலம் உள்துறை செயலாளராக இருந்த அமுதா ஐ.ஏ.எஸ் வருவாய்த்துறை செயலாளராக மாற்றப்பட்டார். இந்நிலையில் வருவாய்த்துறை செயலாளராக உள்ள அமுதாவுக்கு முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவில், ‘தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் அரசு முதன்மைச் செயலர் அமுதா, ஐ.ஏ.எஸ்., முதல்வரின் முகவரி சிறப்பு அதிகாரி பதவியின் முழு கூடுதல் பொறுப்பை கவனிப்பார். மேலும் அவர் மக்களுடன் முதல்வர் மற்றும் பிற மக்கள் குறை தீர்க்கும் துறைகளுக்கு சிறப்பு அதிகாரியாக செயல்படுவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.